சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. இதையடுத்து வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கியது. இது கடந்த 4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் 145 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களில் 137 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள் ஆகும்.
இதனைத் தொடர்ந்து 5ஆம் தேதி, வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.வேட்பு மனுவில் முன்மொழிந்த இருவரின் பெயர்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதால் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டது. படிவம் 26ஐ முழுமையாக நிரப்பாத காரணத்தால் தீபாவின் மனு நிராகரிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக 73 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ஏற்றுக் கொள்ளப்பட்ட 72 வேட்பாளர்களில் 14 பேர், தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர். இதன் காரணமாக 58 பேர் மட்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.வரும் 24ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.