Home » ”எங்களுக்கு சொந்த நாடே துரோகம் இழைத்ததாக உணர்கிறோம்” – ஹிஜாப் வழக்கு தொடர்ந்த மாணவிகள்

”எங்களுக்கு சொந்த நாடே துரோகம் இழைத்ததாக உணர்கிறோம்” – ஹிஜாப் வழக்கு தொடர்ந்த மாணவிகள்

0 comment

பெங்களூரு: “சொந்த நாடே எங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக உணர்கிறோம். இன்று இஸ்லாமிய பெண்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது” என்று ஹிஜாப் வழக்கின் மனுதார்களான மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

“ஹிஜாப் அணிவது இஸ்லாம் மத நம்பிக்கையின்படி அத்தியாவசியமான பழக்கவழக்கம் அல்ல. மேலும், இது அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 25 வழங்கும் மத உரிமையின் கீழ் வரவில்லை. அதனால், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்” என்று கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கு தொடர்ந்த மாணவிகள், “மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் மீதான தடையை உறுதி செய்யும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, எங்கள் சொந்த நாடே எங்களுக்கு துரோகம் செய்ததாக உணர வைக்கிறது. எங்கள் நீதி அமைப்பு, சமூதாயத்தின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. இது எங்களுக்கு கிடைத்த அநீதி.

ஹிஜாப் எங்கள் மதத்தின் முக்கிய அம்சம். ஓர் இஸ்லாமியப் பெண் தனது தலைமுடி மற்றும் மார்பை முக்காடு போட்டு மறைக்க வேண்டும் என்று குரான் கூறுகிறது. குரானில் குறிப்பிடப்படாவிட்டால் நாங்கள் ஹிஜாப் அணிந்திருக்க மாட்டோம். குரானில் கூறப்படாவிட்டால் நாங்கள் போராடியிருக்க மாட்டோம். பி.ஆர். அம்பேத்கர் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர் அழுதிருப்பார்.

இந்தப் பிரச்சினை உள்ளூர் மட்டத்தில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது அரசியலாக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஹிஜாப் இல்லாமல் கல்லூரிக்கு செல்ல மாட்டோம். அனைத்து சட்ட வழிகளையும் முயற்சிப்போம். நீதிக்காகவும் எங்கள் உரிமைக்காவும் போராடுவோம்” எனத் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கின் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடவுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter