தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள செங்கப்படத்தான் காட்டைச் சேர்ந்த சேகர் – பங்கஜவல்லி ஆகியோரின் மகள் பானுப்பிரியா என்கிற லெட்சுமி (வயது 25), இவரை மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த சீனு என்பவர் மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் அங்கு வசிக்கும் வசந்தா என்பவரிடம் அனுப்பி வைத்துள்ளார்.
வசந்தா, லெட்சுமியை சீனப் பெண் ஒருவரிடம் அப் பெண்ணிற்கு தெரியாமல் அவரை விலைக்கு விற்றுள்ளார்.
அந்த சீனப் பெண் லெட்சுமியை வேலைக்கு அனுப்பாமல் அங்கேயுள்ள விடுதிக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு துன்புறுத்தியுள்ளனர்.
இதற்கு உடன்படாத லெட்சுமி அங்கிருந்து தஞ்சை மாவட்ட SDPI நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, தான் மலேசியாவில் ஆபத்தில் இருப்பதை எடுத்துக் கூறி உதவி கோரியுள்ளார்.
இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட SDPI நிர்வாகிகள், மலேசியாவில் இயங்கி வருகின்ற ‘இமிம்’ (IMIM) என்கிற அமைப்பைத் தொடர்பு கொண்டு லெட்சுமியை காப்பாற்றியுள்ளனர். மேலும் இமிம் அமைப்பின் தலைவர் சபாருதீன், அப்துல் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்ததின் பேரில் மலேசியா போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மிஜி தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள வசந்தா மற்றும் அவர் சார்ந்த கும்பலை போலீசார் கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
லெட்சுமியை பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சியில் SDPI கட்சியின் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர் என அக் கட்சியின் மாவட்டத் தலைவர் Z.முகமது இலியாஸ் நம்மிடம் தெரிவித்துள்ளார்.