இது தொடர்பாக கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6 அன்று தலித் இஸ்லாமியர் எழுச்சி நாளாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கடைப்பிடித்து வருகிறது. இந்த ஆண்டு அதையொட்டி சென்னை, ஜமாலியாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பேசிய போது; ராமர் கோயில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே, அதை இடித்து விட்டு அங்கே மீண்டும் இராமர் கோயிலை கட்டப்போகிறோம் என வகுப்புவாதிகள் பேசி வருகின்றனர். இந்த வாதம் சரி என்றால் பௌத்த, சமண கோயில்களை இடித்து அந்த இடங்களில் தான் சிவன் கோயில்களும், பெருமாள் கோயில்களும் கட்டப்பட்டுள்ளன. அங்கே மீண்டும் பௌத்த விகார்களை கட்டுவோம் என கூற முடியுமா? என்ற கேள்வியை திருமாவளவன் அவர்கள் எழுப்பினார்.
ஒரு வழிப்பாட்டுத்தலம், முன்பு வேறு மதத்தின் வழிப்பாட்டுதலமாக இருந்தது என்று கூறினால் நாட்டில் எந்தவொரு வழிப்பாட்டுத்தலமும் மிஞ்சாது என்று வரலாற்று உண்மைகளை தான் திருமாவளவன் எடுத்துரைத்திருந்தார். ஆனால் சில ஊடகங்கள் தேவைக்கு ஏற்ப தங்களது சுய விளம்பரத்திற்காக அதனை திரித்து மாற்றம் செய்து வெளியிட்டு இருந்தது.
இந்த செய்தி வெளிவந்ததை தொடர்ந்து திருமாவளவன் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி பரிசு அளிக்கப்படும் என திருப்பூரில் இந்து முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் அறிவித்துள்ளார். அதே போன்று பா.ஜ.க தலைவர் எச். ராஜா மயிலாடுதுறையிலும், கரூரிலும் நடைபெற்றது போல் விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என பேசி விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக வன்முறையை தூண்ட முயற்சித்துள்ளார்.
இது போன்றே தொடர்ந்து மதசார்பற்ற சக்திகளை அச்சுறுத்துவது, எழுத்தாளர்களை மிரட்டுவது, ஊடகவியலாளர்களை மிரட்டுவது, அவர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கூடிய செயல்பாடுகளில் சங்க பரிவார அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பாபரி மசூதியை இடித்து விட்டு இதை போன்று இன்னும் சில பள்ளிவாசல்களை இடிப்போம் என சொல்லக்கூடிய சங்க பரிவார அமைப்புகள் தொல். திருமாவளவன் கோயில்களை இடித்து விட்டு பௌத்த விகார்களை கட்ட முடியுமா? என்று வாதத்திற்காக சொன்னதை வைத்து கொந்தளிப்பது வேடிக்கையாக உள்ளது..
நான் ஒரு வாதத்திற்காக சொன்னேன் என்று திருமாவளவன் அவர்கள் சொன்னப்பிறகும் கூட இச்செயலை அரசியலாக்குவது சங்க பரிவார அமைப்புக்களுடைய கீழ்த்தரமான அரசியல் என்பது தெளிவாக தெரிகிறது. திருமா தலைக்கு விலை வைக்கும் இத்தகைய பயங்கரவாத சக்திகளை தமிழக அரசு முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கையாக கூறிக்கொள்கிறேன்.
இதுவரை வட இந்தியாவில் சங்பரிவார அமைப்புக்களால் அறிவிக்கப்பட்டு வந்த காட்டுமிரண்டித்தனமாக அறிவிப்பான கருத்து சுதந்திரத்துக்கு எதிராக தலைக்கு லட்சங்கள், கோடி என்ற பரிசு தற்போது தமிழகத்திலும் ஊடுருவி இருப்பது மிகவும் ஆபத்தானது. இது போன்ற அச்சமூட்டும் அறிவிப்பை வெளியிட்டு தமிழகத்தில் மக்களிடையே ஒரு விதமான பதற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.
தொல்.திருமாவளவன் தலித்துகளுக்காக மட்டுமின்றி சிறுபாண்மை மக்கள் மற்றும் அனைத்து மக்கள் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுக்கும் ஒரு அரசியல் தலைவர். அவரை மிரட்டும் பணியிலோ, அவரை அச்சுறுத்தும் வகையிலோ சங்க பரிவார அமைப்பினர் தங்களது செயலை காட்டுவார்கள் என்றால் அதை எதிர் கொள்ளும் களத்தில் விடுதலை சிறுத்தைகளோடு எஸ்.டி.பி.ஐ. கட்சி துணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து மதசார்பற்ற சக்திகளும் சங்க பரிவார அமைப்புகளுக்கு எதிராக தொல்.திருமாவளவன் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்.
சமூக நல்லிணத்திற்கும், சமூக அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக பேசிவரும் பா.ஜ.க எச்.ராஜா, இந்து முன்னேற்ற கழகத்தை சேர்ந்த கோபிநாத் உள்ளிட்டோர் மீது தமிழக காவல் துறை மூலம் உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.