Home » அதிராம்பட்டினம் தாலுக்கா! தவிடுபொடியாக்கப்படும் கடலோர மக்களின் கனவு!! -ஜெ.சாலிஹ்

அதிராம்பட்டினம் தாலுக்கா! தவிடுபொடியாக்கப்படும் கடலோர மக்களின் கனவு!! -ஜெ.சாலிஹ்

by
0 comment

நாட்டின் நிர்வாக அமைப்பில் பெரும்பாலும் மாவட்ட ஆட்சியரின் பங்கு குறித்து அனைவரும் அறிந்திருப்போம். ஏன், நம் வீட்டு பிள்ளைகளை நன்றாக படித்து கலெக்டராக வேண்டும் என்று தான் சொல்லி வளர்த்திருப்போமே தவிர, நீ வட்டாட்சியராக வேண்டும் என கூறி இருக்க மாட்டோம்.

ஏனெனில் மாவட்ட ஆட்சியர்/கலெக்டர் பதவியை மக்களுக்கு சேவை செய்யும் உன்னத பணியாக நாம் கருதுவதே அதற்கு காரணம். அந்த வரிசையில் வட்டாட்சியரும் ஒன்றும் சலைத்தவர் அல்ல. தாலுக்கா அலுவலகத்தின் பீடத்தில் அமர்ந்திருக்கும் தாசில்தார் தான் அந்த வட்டாட்சியர். பட்டா, வாரிசு, சாதி உள்ளிட்ட சான்றிதழ்களை அச்சடித்து கொடுக்கும் இடமாக மட்டுமே தாலுக்கா அலுவலகத்தை நம்மில் பெரும்பான்மையானோர் பார்க்கின்றோம். ஆனால் உண்மையில் அதிகார பகிர்வில் வட்டாட்சியரின் உத்தரவுகள், செயல்பாடுகளை அரசு இயந்திரத்தால் ஒதுக்கிவிட முடியாது.

உதாரணமாக புயல் போன்ற பேரிடர் காலங்களில் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை எதிர்பார்த்து காத்திருக்காமல் தன் வட்டத்தில் இருக்கும் அரசு அதிகாரிகளை கமாண்டராக இருந்து இயக்கும் பொறுப்பு வட்டாட்சியருக்கு உண்டு. அதேபோல், நிவாரணத்திற்காக அரசு கஜானாவிலிருந்து  நாளொன்றுக்கு ரூ. 2லட்சம் வரை செலவு செய்யும் அதிகாரம் வட்டாட்சியரின் கையெழுத்துக்கு இருக்கிறது. இதனால் பேரிடர் காலத்தில் மக்களுக்கு துரிதமாக அரசின் சேவைகள் கிடைக்கும். மக்களும் ஓரளவு பாதிப்பிலிருந்து விரைவாக மீண்டு வருவர்.

இந்த உரிமையை தான் அதிராம்பட்டினம் கடலோர மக்களுக்கு மறுத்திருக்கிறார் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை. தஞ்சாவூர் மாவட்டத்தில் நகராட்சி அந்தஸ்தில் இருப்பது இரண்டே ஊர்கள். ஒன்று பட்டுக்கோட்டை மாற்றோன்று அதிராம்பட்டினம். ஏற்கனவே நகராட்சியாகவும் தாலுக்காவாகவும் பட்டுக்கோட்டை இருக்கிறது. 178 வருவாய் கிராமங்களை கொண்ட அந்த தாலுக்காவை நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரித்து அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, ஆண்டிக்காடு ஆகிய சரகங்களை கொண்டு புதிதாக அதிராம்பட்டினம் தாலுக்கா உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்லாண்டு காலமாக இருந்து வருகிறது.

ஆனால், சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் பேரூராட்சியாக இருந்த அதிராம்பட்டினத்தை நகராட்சியாக பெயரளவில் தரம் உயர்த்தி அவசர அவசரமாக வார்டு மறுவரையரையில் குளறுபடிகள் செய்து நகராட்சி மன்ற தேர்தலையும் நடத்தி முடித்துவிட்டனர். அத்தோடு நிற்காமல் அதிரையர்கள் தலையில் ஒன்றரை மடங்கு வரி உயர்வையும் சுமத்தியுள்ளனர்.

இவையெல்லாத்தையும் தாங்கிக்கொண்டு தாலுக்கா கிடைக்கும். நம்மோடு நம் சுற்றுவட்டார பகுதி மக்களும் பயன்பெறுவர் என நம்பிக்கொண்டிருந்த அதிரை கடலோர மக்களின் தலையில் இடியாய் வந்து இறங்கி இருக்கிறது சட்டமன்றத்தில் கா.அண்ணாதுரை பேசிய பேச்சு. பிறருக்கு தாலுக்கா கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. தவமாய் காத்திருக்கும் அதிரை கடலோர மக்களை அற்ப அரசியலுக்காக புறந்தள்ளிவிட்டு பிறருக்கு தாலுக்காவை தாரைவார்க்காதீர் என்று தான் கூறுகிறோம்.

அதிராம்பட்டினம் தாலுக்கா எங்கள் உரிமை! அதை பெற்றுத்தர வேண்டியது கா.அண்ணாதுரையின் கடமை!!

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter