
அதிரை சால்ட் லைனில் காவலர்களுக்கான குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட காவலர்கள் குடும்பத்தோடு தங்கி உள்ளனர். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் காவலர் குடியிருப்பின் முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், மின் வாரியத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். ஆனால் நள்ளிரவு 1 மணிக்கு தான் அப்பகுதியில் மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வேறொரு மின் கம்பியை மாற்றி மீண்டும் மின் இணைப்பு கொடுத்துள்ளனர். அதிரையில் இவ்வாறு அடிக்கடி மின் கம்பிகள் அறுந்து விழுவதாக கூறும் பொதுமக்கள், நகர் முழுவதும் உடனடியாக அபாய நிலையில் இருக்கும் மின் கம்பிகளை ஆராய்ந்து மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் களிமேடு கிராமத்தில் தேர் திருவிழாவில் மின் கம்பி உரசியதில் 11 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.