சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்தது. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும் நிலையில், கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மெய்ய நாதன், டி.ஜி.பி.சைலேந்திரபாபு உட்பட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.