அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஊழியர்களுக்கும்,கால்டாக்சி ஓட்டுனர்களுக்குமிடையே வாக்குவாதம் நடைபெற்றது.
அதிரை பேருந்து நிலையத்தில் எந்தவொரு தனியார் வாகனமும் நிறுத்தக்கூடாது என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.அதனடிப்படையில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கால்டாக்சிகள் மற்றும் வேன்கள் நிறுத்துவதற்கு காதிர் முகைதீன் பள்ளி அருகே பேரூராட்சி ஏற்பாடு செய்தது.
இதனை முத்தமாள் தெரு பொதுமக்கள் கடுமையாக எதிர்த்ததால் நிரந்த வாகன நிறுத்தம் அமைக்கும் வேலைகள் பாதியோடு நிறுத்தப்பட்டது.மீண்டும் வாகனங்களை பேருந்து நிலையத்திற்கே கொண்டு வந்து போட்டனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் இரவு 11 மணிக்கு பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் அவர்களின் உத்தரவின் பேரில் பேருந்து நிலையத்தின் முன்பக்கம் வேலி அமைக்கப்பட்டது.
வேலி அமைத்ததன் எதிரொலியாக காலையில் கால்டாக்சி ஓட்டுனர்களுக்கும்,பேரூராட்சி பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.இதனால் அதிரை பேருந்து நிலையத்தில் காலையில் பரபரப்பாக காணப்பட்டது.
வாக்குவாதத்திற்கு பிறகு துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.தங்களை தகாத முறையில் கால்டாக்ஸி ஓட்டுனர்கள் திட்டினார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து அன்பரசன் அவர்கள் அதிரை எக்ஸ்பிரஸ் நிருபரிடம் கூறியதாவது,
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட உத்தரவை தான் பேரூராட்சி நிர்வாகம் நடைமுறைப்படுத்துகிறது.நாங்கள் எதும் தன்னிச்சையான முடிவுகளை எடுக்கவில்லை.மேலும் பலவகையில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பேருந்து நிலையத்தில் கால்டாக்சி போடுவதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.பொதுமக்களும் அரசு பேருந்துகளில் ஏறுவதற்கு பேருந்து நிலையம் தாண்டி சாலையில் தான் ஏற வேண்டிய சூழ்நிலையும் இருக்கிறது,இதனால் வாகன விபத்துக்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான் வேலி அமைக்கப்பட்டது.
மேலும் அவர் கூறுகையில் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.