Home » போராட்டகளமாகும் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி?

போராட்டகளமாகும் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி?

by அதிரை இடி
0 comment

அதிரையின் அறிவொளி சுடராக திகழும் MKN மதரஸா டிரஸ்ட்டின் கீழ் காதிர் முகைதீன் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு புதிதாக அமைக்கப்பட்ட நூற்றாண்டு பிரதான நுழைவாயில் வளைவில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இது கல்லூரியின் வரலாற்றை சிதைக்கும் செயல் என கூறி கடந்த மே மாதம் அதிரை காவல் நிலையத்தில் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் முன்னாள் தாளாளர் முகமது அஸ்லம் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் MKN மதரஸா டிரஸ்டின் நிர்வாகிகளுடன் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் நாசரின் பெயரும் சேர்க்கப்பட்டது. இந்த தகவல் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களில் பணிப்புரியும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைத்து பணியாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நாம் விசாரித்த வகையில், MKN மதரஸா டிரஸ்ட்டுக்கான நிர்வாகிகளை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வக்ப் வாரியம் நியமிக்கும். இதனால் இந்த கல்வி நிறுவனங்களை பொறுத்த வரை அடிக்கடி நிர்வாகம் மாறும். அந்த நிர்வாகம் என்ன சொல்கிறதோ அதை கேட்டு நடக்க வேண்டியது ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் கடமை. கல்லூரி முதல்வரானாலும் பள்ளியின் தலைமை ஆசிரியரானாலும் டிரஸ்ட் சொல்வதை கடைபிடித்தே ஆக வேண்டும்.

இந்த சூழலில் டிரஸ்ட் நிர்வாகிகளின் முடிவுக்கு எதிராக செயல்பட முடியாத பணியாளரான கல்லூரி முதல்வர் நாசரின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் காவல் துறை சேர்த்திருப்பது கல்வி நிறுவன பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு நிற்காமல் இந்த முதல் தகவல் அறிக்கையை காரணம் காட்டி கல்லூரி முதல்வர் நாசருக்கு கிடைக்க வேண்டிய ஓய்வு பலன்களை கொடுக்க கூடாது என்று சம்மந்தப்பட்ட துறைக்கு சிலர் புகார் அளித்துள்ளனர்.

இதனால் தங்களின் பணிக்கான பாதுகாப்பு கேள்வி குறியாகி இருப்பதாகவும், இதே பாணியில் யாரை வேண்டுமானாலும் அடுத்தடுத்து மிரட்ட இயலும் என காதிர் முகைதீன் கல்வி நிறுவன பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அதிரை காவல்துறை பதிந்திருக்கும் முதல் தகவல் அறிக்கையிலிருந்து கல்லூரி முதல்வர் நாசரின் பெயரை நீக்க வேண்டும் என வலியுறுத்தி அதிரை காவல் நிலையத்தில் காதிர் முகைதீன் கல்லூரி பணியாளர்கள் 133 பேர் கையொப்பமிட்டு மனு அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பேராசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஒன்றிணைந்து அறவழி போராட்டத்தை நடத்த நேரிடும் என்றும் அறிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter