செகந்திராபாத் – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் திருவாரூர் – காரைக்குடி மார்க்கத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. செகந்திராபாத் – ராமேஸ்வரம்(வண்டி எண் : 07685) இடையே வரும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் டிசம்பர் 28ம் தேதி வரை வாரம் ஒருமுறை புதன்கிழமைகளில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் – செகந்திராபாத்(வண்டி எண் : 07686) இடையே வரும் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திரிப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், கூடூர், நெல்லூர், காவலி, ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், சாதென்பள்ளி, மிரியாளகுடா, நல்கொண்டா, பகிடிபள்ளி வழியாக செகந்திராபாத் சென்று சேருகிறது.

இந்த ரயில் சென்னை வழியாக இயக்கப்படுவதால் அதிராம்பட்டினத்தில் இருந்து சென்னை செல்லும் முதல் விரைவு ரயிலாக இது இருக்கிறது. தற்போது ராமேஸ்வரம் – செகந்திராபாத், செகந்திராபாத் – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஏற்கனவே அதிராம்பட்டினம் வழியாக இயக்கப்பட்டு வரும் வேளாங்கண்ணி – எர்ணாகுளம் வாராந்திர விரைவு ரயில் இருமார்க்கத்திலும் பயணிகள் நிரம்பி செல்கிறது. தற்போது இயக்கப்பட இருக்கும் ராமேஸ்வரம் – செகந்திராபாத் விரைவு ரயிலையும் பொதுமக்கள் சரியாக பயன்படுத்தும்பொழுது, திருவாரூர் – காரைக்குடி மார்க்கத்தில் அதிராம்பட்டினம் வழியாக மேலும் பல விரைவு ரயில்கள் இயக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.