அதிரையில் 12வது வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு கீழ்புறம் 3வது சந்தில் தார்சாலை சிதிலமடைந்து கருங்கற்களாக சிதறிக்கிடப்பதால் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் சறுக்கியபடி விபத்திற்குள்ளாவது வாடிக்கையாகி வருகிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக போடப்பட்ட இந்த தார்சாலை முற்றிலும் சேதமடைந்ததோடு, மழைக்காலங்களில் மீதமிருக்கும் கருங்கற்களும் பெயர்ந்து வருவதால் இந்த சாலை மிகவும் கரடுமுரடானதாகவும் இவ்வழியே பள்ளிவாசல்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து இப்பகுதியில் வசிக்கும் 48 வயது மதிக்கத்தக்க ஒருவர் கூறுகையில்,
5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும் போதெல்லாம் புதிய சாலை அமைத்து தருவதாக சொல்லி எங்கள் வாக்குகளை பெற்றுவிட்டு வெற்றியடைந்ததும் எங்கள் வார்டில் இருக்கும் குறைகள் மற்றும் தேவைகளை நிவர்த்தி செய்யாமல் இருப்பது வேதனையளிப்பதாகவும் மேலும், கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் ராளியா முகமது சுகைப் விரைவில் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் தேவையாக இருக்கும் புதிய தார்ச்சாலையை அமைத்து தருவார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருப்பதாகவும், ஒரு வேலை அவரும் அப்பணியை செய்யாமல் மற்ற கவுண்சிலர்களை போல கண்டும் காணாமல் கடந்தால் அடுத்த தேர்தலில் 12வது வார்டு மக்களின் எண்ண ஓட்டங்களை தேர்தல் முடிவுகள் சொல்லும் எனக் கூறியுள்ளார்.
12வது வார்டு மக்களின் நம்பிக்கைக்குரிய திமுக கவுன்சிலராக இருக்கும் ராளியா முகமது சுகைப் புதிய தார்சாலை அமைத்து கொடுப்பாரா அல்லது இப்பகுதி மக்களின் தேவை எப்பொழுதும் போல் வெறும் காணல் நீர் தானா என்பதை காலமும் இப்பகுதியின் கவுன்சிலரும் தான் பதில் சொல்ல வேண்டும்.



