பொருளாதாரத்தில் பின்தங்கிய அதிரை மக்களுக்கு உதவி செய்வதற்காக தோற்றுவிக்கப்பட்ட அதிரை பைதுல்மால், கடந்த 25 ஆண்டுகளாக ஆதரவற்றவர்களுக்கு மாதாந்திர பென்ஷன், ஜக்காத், வட்டியில்லா நகை கடன் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறது. இதனிடையே அதிரை பைதுல்மாலில் மேலாளராக வேலை செய்துவந்த ஹாஜா ஷரீப் என்பவர் பைதுல்மால் லாக்கரில் இருந்த கோடி கணக்கான மதிப்பிலான தங்க நகைகளை கையாடல் செய்த சம்பவம் அண்மையில் வெளியில் தெரியவந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனிடையே இந்த கையாடல் சம்பவம் குறித்து தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் அதிரை பைதுல்மால் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் முன்னாள் மேலாளர் ஹாஜா ஷரீப்பை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.