நபீலா சையத், அமெரிக்காவில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரான கிரிஸ் போஸ் என்பவரை வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபீலா சையத், அமெரிக்காவில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரான கிரிஸ் போஸ் என்பவரை வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறார். இதன் மூலம் மிக இளம் வயதில் இல்லினாய்ஸ் பொதுச் சபையின் உறுப்பினராகியிருக்கிறார் நபீலா.
இந்த வெற்றி குறித்து நபீலா தனது ட்விட்டர் பக்கத்தில், என் பெயர் நபீலா, நான் 23 வயதாகும் இஸ்லாமிய அமெரிக்க இந்தியர். இந்த ஜனவரியில் இல்லினாய்ஸ் பொதுச் சபையில் இடம்பெறும் இளம் வயது உறுப்பினராக நான் இருப்பேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
தனது பயணம் குறித்து நபீலா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என்னை வேட்பாளராக அறிவித்தவுடன், நான் மக்களை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அவர்களிடம், அவர்களின் கோரிக்கைகளை எடுத்துவைக்கும் நல்ல தலைமைக்கான உறுதியை அளித்தேன். இதுவே நான் வெற்றிபெற பெரிதும் உதவியது. மேலும், இதுவரை நான் இந்த ஊரிலிருக்கும் அனைத்து வீடுகளின் கதவுகளையும் தட்டியிருக்கிறேன். தற்போது அவர்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்காக, அவர்களுக்கு நன்றி சொல்ல மீண்டும் கதவுகளைத் தட்டப்போகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மிக இளம்வயதில் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் நபீலாவுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. நபீலாவின் செயல்பாடுகளுக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பு நல்கப்போவதாகத் தெரிவித்திருக்கின்றனர் அவரை தேர்ந்தெடுத்த மக்கள்.