
நீர்வளத்துறையின் கீழ் பராமரிப்பில் உள்ள கல்லணை கால்வாயில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக பட்டுக்கோட்டை தாலுக்கா ராஜாமடம் கிளைகால்வாய், கிளைவாய்க்கால் மற்றும் ஏரிகளை புனரமைப்பு செய்வது குறித்து விவசாயிகளின் கருத்துக்களை கேட்பதற்கான கூட்டம் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வருகை புரிந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரையை திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளரும் முன்னாள் சேர்மனுமான எஸ்.எச். அஸ்லம், நகர முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் சாகுல் ஹமீது, துணை அமைப்பாளர் கிருபா உள்ளிட்டோர் வரவேற்றனர்.




இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் உள்ளிட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்று விவசாயிகளின் கருத்துக்களை கேட்டனர். அப்போது அதிரையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி தென்னை விவசாயத்தை பாதுகாத்திடும் வகையில் குளங்களுக்கு செல்ல கூடிய கிளைவாய்கால்களையும் தூர்வாரி புனரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். மேலும் ஆண்டிக்குளம், வண்ணான் குட்டை, கருவாட்டு குட்டை, ஆதிதிராவிடர் குட்டை, ஆரியன் குளம், பெருமாள் குட்டை, காட்டு குளம், சர்கரை குட்டை, வாழக்குளம், வண்ணியர் குட்டை, நாயக்கர் குட்டை, பள்ளிக்குட்டை, மன்னப்பன் குளம், வண்ணான் குளம் ஆகிய குளங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் காணாமல் போன குளங்களை கண்டுபிடித்து மீட்க வேண்டும் என வலியுறுத்தினர்.