
கோஷ்டிப்பூசல் இல்லாமல் அரசியல் கட்சிகள் இல்லை. ஆனாலும் கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் கட்சியின் மதிப்பை கருத்தில் கொண்டு அவற்றை வெளிப்படையாக காட்டிக்கொள்ள மாட்டார்கள். தலைமைக்கு கட்டுப்பட்டு தங்களின் அரசியல் சதுரங்க விளையாட்டை மறைமுகமாக செய்வார்கள். இதனால் மக்களின் மத்தியில் கட்சியின் மதிப்பு மங்காமல் பார்த்துக்கொள்வர்.
ஆனால் அதிரை நகர திமுக நிர்வாகிகளோ மதிப்பாவது மண்ணாங்கட்டியாவது என்ற மமதையில் இருப்பதாக உள்ளூர் உடன்பிறப்புகள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். அதற்கு கடந்த கால அரசியல் நிகழ்வுகளை சுட்டிக் காட்டும் அவர்கள், நாளை (நவம்பர் 29) நடக்க கூடிய அதிரை நகர திமுக செயல்வீரர்கள் கூட்ட அழைப்பிதழில் மண்ணின் மைந்தன் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான எஸ்.எச்.அஸ்லமின் பெயரை திட்டமிட்டே இடம்பெறாமல் செய்திருப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.
நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் என்பது ஒருசாராரின் கோஷ்டி கூட்டம் அல்ல. அது கட்சியின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மக்களுக்கு எடுத்துரைக்கும் செயல்வீரர்களை பட்டைத்தீட்டும் பயிற்சி பட்டறை ஆகும். ஆனால் அத்தகைய பொறுப்புமிக்க கூட்டத்தில் வெறுப்புணர்வை நகர செயலாளர் விதைக்க முற்படுகிறார். இது தவறான முன்னுதாரணமாகும். இந்த வெறுப்பு அரசியல் அதிரை இளைஞர்கள் மத்தியில் முகசுளிப்பை ஏற்படுத்தி இல்லந்தோறும் இளைஞரணி எனும் வீரியமிகு பாய்ச்சலை வீரியமற்றதாக மாற்றிவிடுமோ என அச்சமடைய செய்கிறது என குமுறுகின்றனர் உடன்பிறப்புகள்.
அழைப்பிதழில் முன்னாள் திமுக நிர்வாகிகளில் வேண்டப்பட்டவர்களின் பெயரை அச்சிடும் அதேசமயத்தில், தற்போது மாவட்ட பொருளாளராகவும் மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ள அதிரை மண்ணின் மைந்தன் முன்னாள் பேரூர் சேர்மன் எஸ்.எச்.அஸ்லமின் பெயரை குறிப்பிடுவதை எது தடுக்கிறது என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.