
நீர்வளத்துறையின் கீழ் பராமரிப்பில் உள்ள கல்லணை கால்வாயில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக பட்டுக்கோட்டை தாலுக்கா ராஜாமடம் கிளைகால்வாய், கிளைவாய்க்கால் மற்றும் ஏரிகளை புனரமைப்பு செய்வது குறித்து விவசாயிகள் மற்றும் மக்களின் கருத்துக்களை கேட்பதற்கான கூட்டம் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் கடந்த நவம்பர் 19ம் தேதி நடைபெற்றது. பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் உள்ளிட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மேலும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் அதிரை நகராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் பங்கேற்காதது பேசும் பொருளானது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளை அதிரை எக்ஸ்பிரஸ் தொடர்புக்கொண்டு பேசியது. அதற்கு பதிலளித்த அதிகாரிகள், யாருக்கும் தனிப்பட்டமுறையில் அழைப்புவிடுக்கவில்லை. மாறாக ஊடகங்கள் மூலம் கருத்து கேட்பு கூட்டம் குறித்து பொது அறிவிப்பு செய்தோம். அதனை பார்த்து பலர் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்ததாக கூறினர்.