அதிரை எக்ஸ்பிரஸ்:- காங்கிரஸ் கட்சியின் தலைவராக 11–ந் தேதி ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, ராகுல் காந்தி பதவியேற்கும் நிகழ்ச்சி டெல்லி அக்பர் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. விழா மேடையில், ராகுல் காந்தி, 19 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அமர்ந்து இருந்தனர். ராகுல் காந்தியிடம் சான்றிதழ் வழங்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராகவும் நேரு குடும்பத்தில் இருந்து 6-வது காங்கிரஸ் தலைவராகவும் ராகுல் காந்தி தேர்வாகியுள்ளார்.
இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தனது சகோதரர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொள்வதை காண பிரியங்கா காந்தி அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் வந்திருந்தனர். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டதும், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.