மாண்டஸ் புயல் காரணமாக அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு செய்தனர். இதனையடுத்து அதிரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்று தாங்கள் தயார்நிலையில் இருப்பது குறித்து பேசினர். இதுகுறித்த தகவல் அறிந்த வெளிநாடு வெளியூர்வாழ் அதிரையர்கள் சிலர் தேவையற்ற பதற்றமடைந்துள்ளனர்.
இந்நிலையில் அதிரையில் வசிக்கும் குடும்பத்தினர் குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கஜா புயலின் அனுபவம் நமக்கு இருப்பதாக சுட்டிக் காட்டிய அவர்கள், எதுவாக இருந்தாலும் இறைவனின் அருள் கொண்டு அவற்றை எதிர்கொள்ள தன்னார்வ இளைஞர் பட்டாளம் இருப்பதாக கூறினர். கடந்தமுறை கஜா புயல் மீட்பு பணியில் வெளிநாடு வெளியூர்வாழ் அதிரையர்களின் ஒருங்கிணைப்புடன் அதிரையில் தன்னார்வ இளைஞர்கள் மேற்கொண்ட மீட்பு பணி என்பது அரசு இயந்திரத்தின் செயல்பாட்டைவிட மிக வேகமாகவும் வீரியமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.