Home » உருவானது ‘மாண்டஸ்’ புயல்… தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!

உருவானது ‘மாண்டஸ்’ புயல்… தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!

0 comment

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் நாளை புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது.

இந்த புயல் காரைக்காலுக்கு கிழக்கு-தென்கிழக்கில் 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 640 கிலோமீட்டரிலும் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர், கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் வங்கக் கடலில் கடந்த 5ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம் என கணிக்கப்பட்டது. அதன்படி காற்றழுத்து தாழ்வு மண்டலம் உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக உருவாகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் உருவாகும் பட்சத்தில் ‘மாண்டஸ்’ என பெயரிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலையில் தெரிவித்துள்ளது. இந்த மாண்டஸ் புயல் நாளை புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த புயல் காரணமாக இன்று தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் அதிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்ய உள்ளது.

அதன்பிறகு நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மிகமிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக பலத்த மழையு பெய்ய உள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில், இந்த புயல் புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே கரையை கடக்கலாம். இதனால் டிசம்பர் 9 (நாளை) மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 10) ஆகிய தினங்களில் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் டிசம்பர் மாதம் 10ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter