நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியின் தலைநகரமான தஞ்சாவூரில் AERIES கால்பந்து குழு நடத்திய ஐவர் கால்பந்து போட்டி கடந்த 05/01/2023 அன்று துவங்கியது. இதில் பிரபலமான அணிகள் பல பங்கேற்றன. இந்த தொடரில் அதிரையின் AFFA கால்பந்து அணியும் பங்கு கொண்டு விளையாடியது. தான் சந்தித்த அனைத்து அணிகளையும் வெற்றி கொண்டு இன்று 07.11.2023 மதியம் நடந்த அரை இறுதி போட்டியில் மிகவும் பலம் வாய்ந்த அத்லடிக்ஸ் புல்ஸ் அணியுடன் வாழ்வா சாவா என்று விளையாடி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் நுழைந்தது. தொடர்ந்து நடைபெற்ற இறுதி போட்டியில் AFFA அணியும், தஞ்சாவூர் அருள்தாஸ் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் AFFA அணி 0-0 என்று சமநிலையில் முடித்து இறுதி போட்டியை மேலும் அனல்பறக்க செய்தது. பின்னர் டை பிரேக்கர் என்ற அடிப்படையில் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்வது என்று போட்டி நடத்தும் குழுவின் அறிவிப்பை தொடர்ந்து அதற்கு தயாரான அபூபக்கர் அல்பன்னா தலைமையிலான AFFA வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு 3-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்று அதிரைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த தொடரின் சிறந்த வீரராக AFFA அணியின் கேப்டன் அபூபக்கர் அல்பன்னா மற்றும் தொடரின் சிறந்த கோல்கீப்பராக AFFA அணியின் கோல்கீப்பர் சமீர் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.










