மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு (பிப்ரவரி 15) நாளை கடைசி நாளாகும். ஏற்கனவே கால அவகாசம் அளிக்கப்பட்ட சூழலில் இனிமேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று மின் வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது.
இதற்காக நவம்பர் 28ஆம் தேதி முதல் இணைக்க பணிகள் தொடங்கிய நிலையில் தொடர்ந்து அவகாசம் வழங்கப்பட்டு பிப்ரவரி 15 ஆம் நாள் வரை இணைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் சிலர் இன்னும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்காததால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கத் தமிழ்நாடு மின்சார வாரியம் அவகாசம் வழங்கி நிலையில் தற்போது கடைசி நாள் நெருங்கிவிட்டது.
ஏற்கனவே கால அவகாசம் அளிக்கப்பட்ட சூழலில் இனிமேல் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாது என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் எப்போது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கிறார்களோ அப்போது மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வரை 2.61 கோடி மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளனர். மேலும் சுமார் 6 லட்சம் பேர் இன்னும் ஆதார எண்ணை மின் இணைப்புடன் இணைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.