நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் (PAN) எண்ணை வருமான வரித்துறை வழங்குகிறது. நாட்டில் வருமானம் பெரும் அனைவருக்கும் இந்த பான் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வரி எய்ப்பு, மோசடி பணப் பரிவர்த்தனை போன்ற நிதி களை தவிர்க்க மக்கள் அனைவரும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். அதன்படி அசாம், காஷ்மீர், மேகாலயா மாநிலங்களை சேர்ந்தவர்கள், வருமான வரிச்சட்டம் 1961-ன் படி வீடில்லாதவர்கள், 80 மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள், இந்தியர் அல்லாதவர்கள் போன்ற பிரிவினர் விலக்கு பெற்றவர்கள் ஆவர். எனவே இவர்களை தவிர மீதமுள்ளவர்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆகும்.
நீண்ட காலமாகவே இதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டு வந்த நிலையில் கடைசியாக 31 மார்ச் 2023 க்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும் என வருமானத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஏப்ரல் 1 2023 முதல், இணைக்கப்படாத PAN எண் செயலிழக்கும் என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டு செயல் இழந்தால் அதை இணைத்து உருவாக்கப்பட்ட அனைத்து கணக்குகளும் முடங்க வாய்ப்புள்ளது. எனவே, இனியும் தாமதம் செய்யாமல் பான் கார்டை இணைத்து விடுங்கள்.
இணைப்புக்கான வழிமுறைகள் உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து, UIDPAN என்று டைப் செய்து உங்கள் 12 இலக்க எண்ணை உள்ளிட்டு, பத்து இலக்க பான் எண்ணை உள்ளிடுங்கள். இந்த SMS ஐ, 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். இணைப்பு உறுதியானது SMS மூலம் தெரிவிக்கப்படும். இணையதளம் மூலமாக இணைக்க.. https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar என்ற இணைய முகவரியில் பதிவிடவும். இந்த லிங்கில் சென்று உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து விவரங்கள் சரிபார்த்தப்பின் இணைப்பு உறுதி செய்யப்படும்.
ஆதார் இணைக்கப்படாமல் பான்கார்டு செயலிழந்தால் வருமான வரித்துறையிடம் நிலுவையில் உள்ள பணத்தை திரும்பப்பெற முடியாது. பணத்தை திரும்ப பெறக்கோரி விண்ணப்பிக்கவும் முடியாது.