Home » அதிரையில் ஆக்கிரமிப்பு புகாரை மத சிக்கலாக மாற்றும் ஆளுங்கட்சி கவுன்சிலர்!

அதிரையில் ஆக்கிரமிப்பு புகாரை மத சிக்கலாக மாற்றும் ஆளுங்கட்சி கவுன்சிலர்!

by அதிரை இடி
0 comment

2015ம் ஆண்டு கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளக்காடானதை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இந்த வெள்ள பாதிப்புக்கு நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியதே காரணம் என வல்லுனர்கள் கண்டறிந்தனர். இதனிடையே 2021ம் ஆண்டு அதிரையில் பெய்த கனமழையால் ஆலடிக்குளம் நிரம்பி சாலைகளில் நீர்பெருக்கெடுத்து ஓடியது. இதற்கு அதன் வடிகால் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததே முக்கிய காரணம். இதனால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்றுவதற்கான அரசாணை எண். 540-யை பயன்படுத்தி ஆலடிக்குளம் வடிகாலில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வட்டாட்சிரியரிடம் பத்து ரூபாய் இயக்கத்தை சேர்ந்த மாகிர் மனு அளித்தார்.

ஆனால் தனி நபர்களின் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றாமல் வடிகால் அமைக்கும் பணிக்கு எம்.எம்.எஸ்.தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் தலைமையிலான நகர்மன்றம் அனுமதி அளித்து பணியை துவக்கியுள்ளது.

மக்களின் வரி பணம் ரூ.22லட்சம் வீணாவதை தவிர்க்கும் வகையிலும் அதிவேகமாக வளர்ந்து வரும் அதிரை நகரின் எதிர்கால சவால்களை கருத்தில் கொண்டும் ஆலடிகுளம் வடிகால் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிய பிறகே அங்கு புதிய வடிகால் அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு கொடுத்த சமூக ஆர்வலர் மாகிர் மீது மத சாயம் பூசும் முயற்சியை திமுக கவுன்சிலர் கீர்த்திகா ராஜா மேற்கொண்டிருக்கிறார். மாகிர் ஓர் முஸ்லிம், ஆக்கிரமிப்பாளர்கள் இந்துக்கள் என்பதாக கடிதம் ஒன்றை எழுதி இருக்கும் கீர்த்திகா ராஜா, மக்கள் பிரதிநிதியாக இருந்துக்கொண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய பத்து ரூபாய் இயக்க பொதுச்செயலாளர் டாக்டர் நல்வினை. விஸ்வராஜூ, பொதுச்சேவையில் நாங்கள் மதங்களை பார்ப்பதில்லை. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர் மாகிருக்கு பத்து ரூபாய் இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரிலேயே நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது அதிரையில் மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றலுக்கு மத சாயம் பூச முயல்வது கண்டிக்கத்தக்கது என செல்வக்கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மதத்தின் பெயரில் செய்யும் இழிவான அரசியலை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்தார்.

2022ம் ஆண்டு முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த கவுன்சிலர் ஹலீம், சாலையில் மேற்கொண்ட ஆக்கிரமிப்பை தனி ஒருவனாய் எதிர்த்து நின்ற மாகிர், மதம், சமூகங்கள் கடந்து அனைவருக்குமான தனது சேவையை செய்து வருகிறார். குறிப்பாக ஆனைவிழுந்தான் குளத்தில் அன்றைய பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி சீரழித்ததை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று தடுத்து நிறுத்தியதில் மாகிரின் பங்கு முக்கியமானது.

ஆக்கிரமிப்பை அகற்ற கோரும் நபரின் விபரங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமே அரசு அதிகாரிகள் கொடுப்பது அபாயகரமான செயல். இதன் மூலம் புகார் கொடுத்தவரை பலவிதமாக மிரட்டி பனியவைக்க முயல்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் ஆக்கிரமிப்புக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிக்க முன்வருவதை தடுத்துவிடலாம் என அரசு அதிகாரிகளும் ஆக்கிரமிப்பாளர்களும் எண்ணுகின்றனர்.

உண்மையில் இயற்கைக்கு மதங்கள் கிடையாது. தனது வழித்தடத்தை ஆக்கிரமித்தவர்கள் யாராக இருந்தாலும் தக்கநேரத்தில் இயற்கையே தண்டிக்கும் என்பதற்கு சென்னை பெருவெள்ளமும் அதிரையில் பெய்த கனமழையுமே சாட்சி.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter