தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி 12.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதாகும். இங்கு தார் சாலை, மணல் சாலை உட்பட 59 கிலோ மீட்டருக்கு சாலைகள் உள்ளன. ஆனால் இதில் 16 கிலோ மீட்டருக்கு மட்டுமே கழிவுநீர்வடிகால் வசதி உள்ளது. தார் சாலை வசதிகளும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இந்நிலையில் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சில வீடுகளுக்கு சமீபத்தில் அரசு நிர்ணயம் செய்த புதிய சொத்து வரியை விட மூன்று மடங்கு அதிகமாக வரி விதிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உதாரணமாக அதிரை நகராட்சியின் B மண்டலத்தில் உள்ள 1720 சதுரடி குடியிருப்பு வீட்டிற்கு தற்போது அரசு நிர்ணயித்திருக்கும் புதிய சொத்து வரி என்பது ஆண்டுக்கு ரூ.4,006/- ஆகும். ஆனால் அதிராம்பட்டினம் நகராட்சி ஆண்டுக்கு ரூ.8,740/- வரி கேட்கிறது. இது அரசு நிர்ணயம் செய்த சொத்து வரியை காட்டிலும் இரண்டு மடங்கு சட்டவிரோத கூடுதல் ஆகும்.
இதேபோல் அதிராம்பட்டினம் A மண்டலத்தில் வணிக பிரிவில் 660 சதுரடி கொண்ட ஒரு கட்டடத்தின் அரசு நிர்ணயித்த சொத்து வரி ஆண்டுக்கு ரூ.7,188/- மட்டுமே. ஆனால் நகராட்சி நிர்வாகமோ ரூ.21,900/- வரியாக கேட்கிறது. இது திட்டத்தட்ட மூன்று மடங்கு சட்டவிரோத கூடுதல் வரி நிர்ணயமாகும். இதேபோல் தான் பலரும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் தங்கள் வீட்டிற்கான சொத்துவரியை வரியை அரசு நிர்ணயம் செய்ததை விடவும் பல மடங்கு கூடுதலாக செலுத்தி வருகின்றனர்.
இந்த வரி விதிப்பு குளறுபடிகள் 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுக்குள் புதிய வரிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
அதிராம்பட்டினத்தை பொறுத்தவரை மக்களுக்கு சொத்து வரி கணக்கீட்டு முறை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. நகராட்சி அலுவலர்கள் சொல்வதை அப்படியே கேட்டுக்கொண்டு சென்றுவிடுகின்றனர். ABC என மூன்று மண்டலங்கள் இருப்பதே பெரும்பாலும் அவர்களுக்கு தெரிவதில்லை. அதுமட்டுமின்றி சொத்து வரி என்பது பொதுவரி, நூலக வரி, கல்வி வரி உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது என்ற விபரங்களையும் பெரும்பாண்மையான மக்கள் அறிந்திருக்கவில்லை. நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கொடுக்கப்படும் வரி ரசீதுகளில் வரி விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்படாததும் இதற்கு முக்கிய காரணமாக சொல்லலாம்.
இவைகளுக்கு மத்தியில் அதிராம்பட்டினத்தில் வரி விதிப்பில் நிகழ்ந்திருக்கும் குளறுபடிகள் குறித்து மக்களிடையே அதிரை எக்ஸ்பிரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
சொத்து வரியை கணக்கிடுவது என்பது ஒன்றும் குதிரை கொம்பல்ல. https://tnurbanepay.tn.gov.in எனும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையரக இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வரி கணக்கீட்டு கால்குலட்டரில் தங்கள் சொத்து விபரங்களை உள்ளீட்டு சில நிமிடத்தில் உங்கள் சொத்துக்கான வரி எவ்வளவு என்பதை அறிந்துக்கொள்ளலாம். வரி செலுத்துதல், குடிநீர் இணைப்பு பெறுதல் உள்ளிட்ட தங்கள் நகராட்சி தொடர்பான பிற சேவைகளையும் புகார்களையும் இதே இணையத்தில் பதிவு செய்யலாம் என்பது கூடுதல் சிறப்பு. மேலும் சொத்து வரி குறித்து சந்தேகம் இருப்பவர்கள் 9500293649 என்கிற தொலைப்பேசி எண்ணை தொடர்புக்கொண்டு சந்தேகங்களுக்கு தீர்வை பெறுங்கள். தங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் சொத்துவரி சரிதானா என உறுதி செய்துவிட்டு வரியை செலுத்துங்கள். இல்லையேல் வரியை குறைத்து கேட்டு முறையிடுங்கள்.
-அதிரை சாலிஹ்