ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின் போது எடுத்த வீடியோவை தினகரன் தரப்பு வெளியிட்டு உள்ளது.
முதல் – அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார்.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 72 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா எப்படியும் உயிர் பிழைத்து திரும்பி விடுவார் என்றே அ.தி.மு.க.வினரும் தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு ஏற்ற வகையிலேயே ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்திகள் வெளிவந்தன. அவர் இட்லி சாப்பிட்டதாகவும், தன்னை சந்தித்து உடல்நிலை பற்றி விசாரித்த முக்கிய பிரமுகர்களை பார்த்து கை அசைத்ததாகவும் அவ்வப்போது சாதகமான தகவல்களே வெளியாகி கொண்டிருந்தன.
இதன் காரணமாக அ.தி.மு.க. தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்பட்டனர். தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு காத்துக்கிடந்த
அ.தி.மு.க.வினரை உற்சாகப்படுத்தும் வகையில் கட்சி நிர்வாகிகளும் அமைச்சர்களும் அவ்வப்போது பேட்டியும் அளித்தனர். அப்போது அவர்கள் அனைவரும் அம்மாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையெல்லாம் பொய்யாக்கும் விதத்தில் ஜெயலலிதாவின் உயிர் திடீரென பிரிந்தது. இது அ.தி.மு.க.வினரை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஜெயலலிதா மரணம் அடைந்தபோது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வெளியில் வந்ததும், இந்த பிரச்சினையை பூதாகரமாக கிளப்பினார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டை முதலில் கூறியவர். இதனை மையமாக வைத்தே தனி அணியாக ஆதரவாளர்களை திரட்டினார். ஜெயலலிதா மரணத்தில் நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸ்.சும் கடந்த மாதம் கை கோர்த்தனர். அதன் பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து அரசு ஆணை பிறபித்தார். தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே தினகரன் தரப்பு ஜெயலலிதா கேட்டுக்கொண்டதன் பேரில் சிகிச்சைக்கான வீடியோ பதிவுகள் எடுக்கப்பட்டது. அந்த வீடியோ பதிவு என்னிடம் உள்ளது. அதை அவசியம் வரும் போது வெளியிடுவோம் என கூறி இருந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின் போது எடுத்த வீடியோவை இன்று தினகரன் தரப்பு வெளியிட்டு உள்ளது. அதில் ஜெயலலிதா பழசாறு அருந்துவது போல் உள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார்.