அதிரை எக்ஸ்பிரஸ்:- துக்ளக் ஆசிரியரும் அரசியல் விமர்சகருமான ஆடிட்டர் குருமூர்த்திக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது.
ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி தினகரன் அபார வெற்றி பெற்றார். ஜனநாயகம் மடிந்து ஆர்.கே.நகரில் பணநாயகம் வென்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து பழனிசாமி-பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட நாஞ்சில் சம்பத், புகழேந்தி, கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக, பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் கடுமையாக விமர்சித்து குருமூர்த்தி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதில் ஒரு பதிவில், தினகரன் ஆதரவாளர்கள் மீது அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது: எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தலைவர்களாக செயல்படத் தொடங்கியுள்ளனர். தலைவரின் பாதத்தை தொடுவதும், லஞ்சம் வாங்குவதையும் மட்டுமே இதுவரை அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர் என குருமூர்த்தி தெரிவித்திருந்தார்.
மற்றொரு பதிவில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு தினகரன் ஆதரவு நிர்வாகிகள் ஒன்பது பேர் மீது அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பலவீனமான தலைவர்கள், ஆறு மாதங்களுக்குப் பிறகு நடவடிக்கை எடுத்துள்ளனர் என பதிவிட்டிருந்தார்.
குருமூர்த்தியின் இந்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக பதிலடி கொடுத்தார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், யார் இந்தக் குருமூர்த்தி. அவருக்கு முகமே கிடையாது. மற்றவர்களை விமர்சனம் செய்ய தடித்த வார்த்தைகளை அவர் பயன்படுத்தக் கூடாது. அவரின் தடித்த விமர்சனத்துக்கு நாங்கள் கொதித்தெழுந்தால் என்ன நடக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தன்மானத்தை எந்தக் காரணத்துக்காகவும் விட மாட்டோம். அதிமுகவினர் காங்கேயம் காளை போல செயல்படுகின்றனர். குருமூர்த்தி தடித்த வார்த்தைகளைத் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அவர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார்.
மேலும், படிக்காதவர்கள் கூட பொறுமையாக யோசித்து பேசுவர். ஆனால், குருமூர்த்தி படித்த முட்டாளாக இருக்கிறார். அவர் பேசிய வார்த்தைகளை திரும்பப் பெறாவிட்டால் வழக்கு தொடருவோம் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார்.
ஜெயக்குமாரின் பதிலடிக்கே பதிலடி கொடுத்துள்ளார் குருமூர்த்தி. எனது அறிவுரையின்படி தமிழக அரசு செயல்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட ஜெயக்குமாருக்கு நன்றி. பழனிசாமி அரசுக்கு நான் அறிவுரைகள் வழங்கியதில்லை. ஒரு எழுத்தாளராக அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மீதான எனது விமர்சனத்தை தொடருவேன் என குருமூர்த்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
துக்ளக் இதழின் கேள்வி-பதில் பகுதியில், பழனிசாமி அரசு குறித்து தொடர்ந்து பதிவு செய்துவரும் கருத்தைத்தான் தற்போதும் தெரிவித்தேன். எனவே அதிமுகவின் பலவீனமான தலைமை குறித்த எந்தவிதமான புதிய கருத்தையும் நான் இப்போது தெரிவிக்கவில்லை எனவும் குருமூர்த்தி பதிவிட்டுள்ளார்.
பலவீனமான அதிமுக தலைமை, மன்னார்குடி கும்பல் மீது முறையாக நடவடிக்கை எடுக்காமல், தவணை முறையில் நடவடிக்கை எடுத்ததால் தான், ஆர்.கே.நகர் தொகுதியை அவர்கள் காசு கொடுத்து வாங்கிவிட்டனர். தமிழக காவல்துறையும் பணப்பட்டுவாடாவைத் தடுக்க தவறிவிட்டது என குருமூர்த்தி மீண்டும் கடுமையாக சாடியுள்ளார்.