பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6, ஆண்டுதோறும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், பாபர் மசூதியை இடித்த சங்பரிவார கும்பலை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் டிசம்பர் 6 அன்று பயங்கரவாத எதிர்ப்பு நாளில் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கக்கோரி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக சார்பில் இன்று டிசம்பர் 6 பட்டுக்கோட்டையில் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கக்கோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் இன்று டிசம்பர் 6 மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் முகமது சேக் ராவுத்தர் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் இத்ரீஸ் அஹமது வரவேற்புரை ஆற்றினார்.
தமுமுக தலைமை பிரதிநிதி காரைக்கால் அப்துல் ரஹீம், மமக மாநில துணை பொதுச்செயலாளர் தஞ்சை I.M. பாதுஷா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இறுதியாக தமுமுக பட்டுக்கோட்டை நகர தலைவர் ஜெகபர் அலி நன்றியுரை ஆற்றினார். இதில் மதச்சார்பற்ற கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.