நீங்கள் எவற்றைத் தேடுகிறீர்கள், எதை விரும்புகிறீர்கள், நீங்கள் பார்க்கும் தளம் போன்றவை இதற்குத் தெரியும்.
உலகின் மிகவும் பிரபலமான தேடல் தளமாக கூகுளை பற்றிதான் நாங்கள் பேசுகிறோம்.
”நீங்கள் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் தரவுகளை நம்பி அளிக்கிறீர்கள்”
தமது பயனர்களுக்கான அந்தரங்க உரிமை விதிமுறைகள் மற்றும் நிபந்தனையின் முதல் வரியில் கூகுள் தெளிவாகக் கூறியுள்ளது.
ஆனால், ”மை ஆக்டிவிட்டி (My activity)” செயல்பாட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை அகற்றுவதற்கான சாத்தியத்தை கூகுள் வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கும்.
எளிமையான வழிமுறைகளில் எப்படி இதைச் செய்வது என்பதை விளக்குகிறோம்.
மை ஆக்டிவிட்டியை அழிப்பது
ஒவ்வொரு முறை நீங்கள் கூகுளில் தேடும்போதும், அந்தத் தேடலை கூகுள் உங்களது கணக்குடன் தொடர்புபடுத்தி வைக்கிறது.
ஜி மெயில் உள்பெட்டியில் தேடுவது, இணையத்தில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்வது என நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் இது பதிவிட்டுக்கொள்ளும்.
இத்தகவல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ”மை ஆக்டிவிட்டி (My activity)” எனும் தளத்தில் இருக்கும். நீங்கள் இங்குதான் செல்ல வேண்டும்.
குறிப்பிட்ட பக்கங்களையே, குறிப்பிட்ட ஒரு நடவடிக்கையையோ அழிக்க வேண்டும் என்றால், தேடல் செயல்பாட்டைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பக்கத்தைத் தேடி அழிக்கலாம். அல்லது கொடுக்கப்பட்ட தேதி வரம்புவரை, தேர்வு செய்யப்பட்ட அல்லது அனைத்துப் பக்கங்களையும் அழிக்கலாம்.
இப்படி அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்த எச்சரிக்கை கூகுளிடம் இருந்து வரும். ஆனால் உண்மையில், உங்கள் தேடல் வரலாறை அழிப்பது, உங்கள் கூகுள் கணக்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
யூடியூபில் உங்கள் செயல்பாடு அனைத்தையும் அழிப்பது
யூடியூபில் நீங்கள் எதை பார்க்கிறீர்கள் என்பதையும், எதை தேடுகிறீகள் என்பதையும் கூகுள் பின்தொடர்கிறது.
ஆனால், இதையும் எளிதாக அழித்துவிடலாம். இடது பக்கம் மெனுவில் உள்ள ஹிஸ்டரியை க்ளிக் செய்து, ”அனைத்து தேடுதல் வரலாறு” மற்றும் ” அனைத்து பார்வை வரலாறு” என இரண்டையும் க்ளிக் செய்யவும். இப்படி தேர்வு செய்தபின் அழிக்கலாம்.
உங்களைப் பற்றி விளம்பரதாரர்கள் தெரிந்திருப்பதை அழிப்பது
கூகுள் உங்களைப் பற்றி தெரிந்துகொள்வதுடன், விளம்பரதாரர்களுக்கும் உங்களை பற்றிய தகவல்களைக் கொடுக்கிறது.
அதனால்தான் உங்கள் தேடல் வரலாற்றுடன் பொருந்தக்கூடிய விளம்பரங்களை நீங்கள் அடிக்கடி காண்கிறீர்கள்.
ஆனால் கவலைப்படாதீர்கள் – விளம்பரதாரர்களுக்கு என்ன தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கண்டறியலாம்.
இதை பார்ப்பதற்கு கூகுள் கணக்குக்குள் லாகின் செய்து, தனிப்பட்ட தகவல் & அந்தரங்க உரிமை (Personal info & privacy) பக்கத்திற்குச் செல்லவும்.
பிறகு ஆட்ஸ் செட்டிங் (Ads Settings) ஆப்ஷனுக்கு சென்று, மேனேஜ் ஆட்ஸ் செட்டிங் (Manage ads settings) ஆப்ஷனை க்ளிக் செய்யவும். இதை நீங்கள் செயலிழக்க செய்வதன் மூலம், உங்களைப் பற்றி கூகுள் வைத்துள்ள தகவல்கள் தொடர்பாக விளம்பரங்கள் வராது. விளம்பரமே வராமல் செய்வதற்கான வாய்ப்பு இல்லை.
உங்கள் இருப்பிட வரலாற்றை அழிப்பது
நீங்கள் ஆண்ட்ராய்ட் சாதனம் வைத்திருந்தால், உங்கள் தொலைபேசியுடன் நீங்கள் சென்ற இடங்களின் பட்டியலை கூகுள் வைத்திருக்கும்.
கூகுள் மேப்ஸ் பக்கத்தில் இருந்து இத்தகவல்கள் அனைத்தையும் அழிக்கவேண்டுமானால் நீங்கள் இந்தப் பக்கத்துக்குச் செல்லவேண்டும்.
லோகேஷன் டிராக்கிங்கை ஆப் செய்யவும், முழு வரலாற்றையும் அழிக்கவும், குறிப்பிட்ட நாளுக்கான அல்லது நேரத்துக்கான வரலாற்றை அழிக்கவும் முடியும். கழிவுக்கூடை ஆப்ஷனை கிளிக் செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பயணத்துக்கான பதிவை மட்டும்கூட அழிக்கமுடியும்.