சென்னையில் இருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம் நேற்று காலை 7.30 மணிக்கு உள்நாட்டு முனையத்தில் இருந்து புறப்பட தயாரானது. வழக்கமாக விமான பயணிகள், பாதுகாப்பு சோதனைகளை முடித்து விட்டு விமானத்தின் அருகில் கொண்டு சென்று விடுவதற்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் பஸ்சில் ஏற்றி செல்லப்படுவார்கள். அந்த வகையில் 38 பயணிகளை ஏற்றிக் கொண்டு விமான படிக்கட்டு அருகே சென்று அவர்களை இறக்கி விட்டுவிட்டு மீண்டும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பஸ் திரும்பி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சின் முன்பகுதியில் பேட்டரியில் இருந்து தீப்பொறி பறந்ததால் அந்த பஸ் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. உடனே டிரைவர் லோகநாதன் (30), பஸ்சை அவசர அவசரமாக நிறுத்தி விட்டு கதவை திறந்து கீழே குதித்து ஓடினார். அடுத்த சில விநாடிகளில் பஸ் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டாக்சிவேயில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருக்கும் 2 தீயணைப்பு படை வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன. இருப்பினும் பஸ் டிரைவர் சீட்டின் முன்பகுதி முழுவதும் எரிந்தது. கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பயணிகளை ஏற்றி செல்லும்போதோ அல்லது விமானத்தின் அருகே இறக்கி விடப்படும்போதோ இந்த தீவிபத்து ஏற்பட்டிருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். இந்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
விமான நிலையத்தில் இயக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் முழு தகுதியுடன் இருக்க வேண்டும். ஆனால் இந்த பஸ்சில் மின் கசிவு ஏற்பட்டது எப்படி? முறையாக எப்.சி. செய்யப்பட்டுள்ளதா? என விமான நிலைய உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக டெல்லியில் உள்ள டிஜிசிஏ விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதே போல் விமான பாதுகாப்பு துறையான பீயுரோ ஆப் சிவில் ஏவியேசன் செக்யூரிட்டி பிசிஏஎஸ் என்ற விமான பாதுகாப்பு துறையும் தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளது. இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.