மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா நகரமாகத் திகழும் மாமல்லபுரத்தில் புத்தாண்டுப் பிறப்பு நள்ளிரவு கொண்டாட்டத்தின் போது, ஓட்டல்கள், விடுதிகள், பண்ணை வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்புராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், உணவு , தங்கும் விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகள் ஆகியவற்றின் இயக்குநர்கள், உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர், டிஎஸ்பி சுப்புராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, சுற்றுலா வரும் பெண்களை கேலி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விடுதிகளில் இரவு 12 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதிக்கக் கூடாது. கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. குறிப்பாக கடற்கரை ரிசார்ட்களில் தங்கி உள்ளவர்கள் இரவு 12 மணிக்கு மேல் அவர்கள் தங்கி இருக்கும் அறைகளை விட்டு வெளியே வரக்கூடாது, பின்புறம் உள்ள கடற்கரை பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடலில் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு புத்தாண்டு கொண்டாட வரும் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்கள் தரும் உணவுப் பொருள்களை வாங்கக் கூடாது. மாமல்லபுரம் கடற்கரை சாலை, ஐந்து ரதம், அரச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைப் பாறை, புலிக்குகை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் இரு சக்கர வாகனத்தில் 2 பேருக்கு மேல் பயணம் செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.
கூட்டத்தில், மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி, உதவி ஆய்வாளர்கள், மாமல்லபுரம் ஓட்டல்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புத்தாண்டு: மது அருந்தி வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து’
83