20 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்த ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். தனிக்கட்சி தொடங்கி அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அவரது கட்சி போட்டியிடும் என்றும் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் என்பது அவரது ரசிகர்களால் 1996லிருந்து எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்த ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்கி நேரடி தேர்தல் அரசியலில் இறங்குவதை உறுதிப்படுத்திவிட்டார்.
மாவட்ட வாரியாக தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துவரும் ரஜினிகாந்த், இன்று தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து எதிர்பார்ப்பு எகிறியது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்திற்கு தென்சென்னை ரசிகர்களை சந்திக்க வந்த ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார்.
அப்போது, தமிழ்நாட்டு அரசியல் மிகவும் மோசமாகிவிட்டது. தமிழக அரசியலைக் கண்டு மற்ற மாநிலத்தினர் சிரிக்கின்றனர். அந்த அளவுக்கு தமிழக அரசியல் மோசமாகிவிட்டது. இந்த நிலையிலும் என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு ஜனநாயக ரீதியில் நான் நன்மை செய்யாவிட்டால், சாகும்வரை அந்த குற்ற உணர்வு எனக்குள் இருக்கும் என தெரிவித்தார்.
கடந்த ஓராண்டாக தமிழக அரசியல் நிகழ்வுகள் வெட்கப்படும் வகையில் உள்ளன. அனைத்து சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும். ஆண்டவனின் அருளும் மக்களின் நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். இது இரண்டும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். சாதி மத பேதமற்ற ஆன்மீக அரசியலை முன்னெடுக்க வேண்டும் என ரஜினிகாந்த் பேசினார்.
ரஜினிகாந்த் தனது முதல் அரசியல் பேச்சிலேயே கடந்த ஓராண்டாக அதிமுகவில் நிகழும் நிகழ்வுகளை விமர்சித்து பேசியிருப்பது அவரது அரசியல் பிரவேசத்தோடு சேர்த்து கூடுதல் உற்சாகத்தையும் அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.