2018 புத்தாண்டின் தொடக்கத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் இறுதி வரை நீடிக்கும். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததது.
தற்போது டிசம்பர் மாதம் முடிவடைவதால் வட கிழக்கு பருவமழையும் முடியும் என்று இருந்த நிலையில் அது தற்போது மேலும் ஒரு வாரம் நீடிக்கலாம் என தெரிகிறது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை புத்தாண்டு தினத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதன் நகர்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேலும் வலுவடையும்போது தென் தமிழகம் உட்பட தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள் பகுதியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்சியஸும், அதிகபட்ட வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸூம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.