கும்பகோணம்: அரசு பேருந்தில் 3 கிமீ துாரம் செல்போனில் பேசிக்கொண்டு ஓட்டிய ஓட்டுனரால் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர். திருச்சியிலிருந்து கும்பகோணத்திற்கு நேற்று காலை தஞ்சை, பள்ளியக்கிரஹாரம் வழியாக அரசு பேருந்து சென்றது. ரமேஷ் ஓட்டுனராகவும், அன்பழகன் நடத்துனராகவும் பணியில் இருந்தனர். தஞ்சையில் இருந்து பேருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு பாபநாசம் வழியாக வந்த போது, ஓட்டுனர் ரமேஷ், தனது செல்போனில் பேசத்தொடங்கினார். இதனால் பேருந்தில் பயணம் செய்த 45பயணிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். ஆனால் இதனை பொருட்படுத்தாத ஓட்டுனர், சுமார் 3 கிமீ தூரம் உள்ள சுந்தரபெருமாள்கோயில் வரை பேசிக்கொண்டே சென்றார். பேருந்தின் இடது புறத்தில் இருந்த நடத்துனரும் கண்டு கொள்ளாமல் வந்தார்.
பாபநாசத்திலிருந்து உத்தாணி வரை 5 ஆபத்தான திருப்பங்களில் பேசிக்கொண்டே , பேருந்தை திருப்பி, பைபாஸ் சாலையில் ஆபத்தான நிலையில் ஓட்டிக்கொண்டே வந்ததால், சாலையில் வந்த அனைத்து பேருந்துகளும் ,செய்வதறியாது திகைத்தன. சுந்தரபெருமாள் கோயில் வந்தவுடன் செல்போனில் பேசுவதை நிறுத்தினார். அதன் பிறகு தான் அனைத்து பயணிகளும் நிம்மதியடைந்தனர். செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது என்றும் மீறி ஓட்டினால், உரிமம் ரத்து செய்யப்படும் என அரசு உத்தரவு இருந்தும், அரசு பேருந்து ஓட்டுனர்கள், அரசு உத்தரவை அலட்சியப்படுத்தும் விதமாக , செல்போனை பேசிகொண்டே ஓட்டுவது, உத்தரவை மீறுவதாகும். எனவே வாகனங்களை செல்போனில் பேசிக்கொண்டு, பயணிகளின் நிம்மதியை இழக்கும் வகையில் இயக்கும் ஓட்டுனர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.