அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை, இன்று காலை 12 மணியளவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி உட்பட பல்வேறு தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போது நீண்ட காலமாக பத்து ஆண்டுகாலம் சிறைதண்டனை கழித்த ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு, நேற்றைய தினம் திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 10 ஆண்டு சிறை தண்டனை கழித்த ஆயுள் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு தலைவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். மேலும், இந்த விடுதலை அறிவிப்பில் எந்த பாரபட்சமும் காட்டப்படக் கூடாது. அனைத்து சமூகங்களை சார்ந்த கைதிகளும் அந்த விதிகளுக்கு உட்பட்ட வகையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையையும் அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.
இதனைக் கேட்டுக்கொண்ட முதலமைச்சர் அவர்கள், உச்சநீதிமன்றம் ஏற்கனவே சில வழிகாட்டுதல்களை தந்திருக்கிறது. அந்த வழிகாட்டுதல் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், மாநில அரசுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அந்த அடிப்படையில் இந்த விடுதலை நடவடிக்கை அமையும் என்று அவர் தெரிவித்தார்.
அதன் பிறகு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள முத்தாலாக் சட்ட மசோதாவுக்கு மக்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததற்கு தலைவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். அதே நேரத்தில் அந்த மசோதாவுக்கு எதிராக அதிமுக எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை. ஆகவே, வரக்கூடிய நாட்களில் மாநிலங்களவையில் அந்த மசோதா ஒப்புதலுக்கு வருகிறபோது அதனை தோற்கடிக்கும் விதத்தில் எதிர்த்து அதிமுக எம்.பிக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதனை கவனத்தோடு குறித்துக்கொண்ட தமிழக முதல்வர், இவ்விவகாரத்தில் தங்கள் கோரிக்கை குறித்து தகுந்த நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் சேக் முகமது அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அ.ச.உமர் ஃபரூக், ஏ.கே.கரீம், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எஸ்.என்.சிக்கந்தர், ஜமாத்தே இஸ்லாமி பொது செயலாளர் ஹனீஃபா மன்பயீ மற்றும் ஜலாலுதீன், இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தினுடைய மாநில பொதுச் செயலாளர் ஷாஜஹான், அப்பல்லோ ஹனீபா, இந்திய தேசிய லீக்கின் மாநில நிர்வாகி நாகை ஹூஸைன், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் தலைவர் மன்சூர் ஹாஜியார் ஆகியோர் உடனிருந்தனர்.