தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல் ரஹ்மான், வக்ஃப் வாரிய தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
இதனிடையே தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகத்தில் இன்று 19/09/2024 வியாழக்கிழமை காலை 11 மணியளவில் வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைத்தலைவரும், ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ்கனி எம்பி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக வக்ஃப் வாரிய உறுப்பினர்களுடன் சென்ற அதன் தலைவர் நவாஸ்கனி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். வக்ஃப் வாரிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவாஸ்கனிக்கு, அத்துறையின் அமைச்சர் செஞ்சி மஸ்தான், வக்ஃப் வாரிய உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.