மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் அதிராம்பட்டினம் பவித்ரா திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் S.A. இத்ரீஸ் அகமது தலைமையில் நடைபெற்றது.
இப்பொதுக்குழு கூட்டத்திற்கு தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் M.நசுருதீன் சாலிஹ், மமக மாவட்ட செயலாளர் M.அப்துல் பகத், மமக மாவட்ட துணை செயலாளர்கள் S.M.A.சாகுல் ஹமீது, A.முகமது இலியாஸ், மமக மாவட்ட பொருளாளர் M.ஜெகுபர் அலி, தமுமுக மாவட்ட செயலாளர் A.அப்துல் மாலிக், தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் R.M. நெய்னா முகமது, M. புரோஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மமக மாநில துணைப் பொதுச்செயலாளர் தஞ்சை I.M. பாதுஷா, மாநில பேச்சாளர் கோவை செய்யது மற்றும் மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் L. தீன்முகம்மது ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
இப்பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. இக்கூட்டத்தில் மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் அதிராம்பட்டினத்தைச் சார்ந்து 3 தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
அதன்படி, அதிராம்பட்டினம் வழியாக சென்னைக்கு தினசரி இரவு நேர விரைவு ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும்; அதிராம்பட்டினத்திற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அதன் அடிப்படையிலும் மற்றும் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தகுதி இருந்தும் தனி தாலுகாவாக இதுவரை அறிவிக்காமல் காலதாமதம் செய்து வரும் தமிழக அரசு, உடனடியாக அதிராம்பட்டினத்தை தனித் தாலுகாவாக உருவாக்கித் தர வேண்டும்; தாலுகாவிற்கு ஒரு தீயணைப்பு நிலையம் என்ற பழைய காலங்களில் நடைமுறைகளை உரத்தள்ளிவிட்டு காலத்தின் கட்டாய தேவையை உணர்ந்து, பல வருட கோரிக்கையான அதிராம்பட்டினத்திற்கு உடனடியாக தீயணைப்பு நிலையம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இப்பொதுக்குழு கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளுடன் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.