திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் போது தமிழக அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என கூறினார்.
இந்த நிலையில் நேற்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுகிறார் என்றும் புதிதாக பதவியேற்கும் அமைச்சர்களின் பதவியேற்பு விழா இன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக வி. செந்தில் பாலாஜியும், உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி. செழியனும், சுற்றுலாத்துறை அமைச்சராக ஆர். ராஜேந்திரனும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ஆவடி சா.மு. நாசரும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.
முன்னதாகவே விளையாட்டு துறை அமைச்சராக பதவிப்பிரமானம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் ஏற்றுக்கொண்டு அமைச்சராக பணியாற்றி வரும் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர் பதவியை நேரடியாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற நிலையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள். அதன்படி அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக பொறுப்பாளர் S.H. அஸ்லத்தின் அறிவுறுத்தல்படி இன்று மாலை 4 மணியளவில் மேற்கு நகர அலுவலகத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் மேற்கு நகர அவைத் தலைவர் உமர்தம்பி பாட்ஷா மரைக்காயர் மற்றும் பல்வெறு சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.