அதிரை பிறை எனும் இணைய தளத்தில் பணியிட மாறுதலாகி செல்ல இருந்த நகராட்சி ஆணையர் சித்ரா சோனியாவுக்கு மரியாதை நிமித்தமாக அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடத்தியதை கடந்த 11-10-2024 அன்று விமர்சித்து பதிவிட்டிருந்தனர். இந்த விவகாரத்தில் அதிரை பிறைக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்கிறபோதும் அதிரை மக்களாகிய தங்களுக்கு விளக்கம் அளிப்பது சமூக பணியில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.
எங்களது விளக்கத்தை சமகால உதாரணத்துடன் சற்று ஒப்பிட்டு கூறினால் படிப்பவர்களுக்கு எளிதாக புரியும் என நினைக்கிறோம்.
சமீபத்தில் தற்போதைய தமிழக ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கும் இடையே பல விவகாரங்களில் வார்த்தை போர் உச்சம் தொட்டதை தாங்கள் அறிவீர்கள். ஆனாலும் அவற்றை எல்லாம் கடந்து ஆளுநர் மாளிகையில் நடந்த சுதந்திர தின தேநீர் விருந்தில் நல்லெண்ண அடிப்படையில் முதலமைச்சரும், கடும் விமர்சனங்களை முன்வைத்த அமைச்சர்களும் பங்கேற்றார்கள். இவ்வளவு ஏன் கடந்த மாதம் கூட துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினுக்கும் செந்தில்பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்களுக்கும் இதே ஆளுநர் தான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஆயிரம் கருத்துவேறுபாடுகள் இருதரப்புக்கும் இடையே இருந்தாலும் நம் அரசியலமைப்பின்படி ஆர்.என்.ரவி தான் மு.க.ஸ்டானுக்கு ஆளுநர், மு.க.ஸ்டாலின் தான் ஆளுநருக்கு முதலமைச்சர். அதேபோல் அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவரே தான் அந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கும் ஆணையர் என்பதை யாரும் சட்டப்படி மறுத்துவிட முடியாது.
இதனிடையே நல்லெண்ண அடிப்படையிலேயே சித்ரா சோனியாவுக்கு அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் சங்கம் பிரிவு உபசார நிகழ்ச்சியை நடத்தியது. இங்கு யாரையும் புனிதராக்கும் தந்திரமோ அல்லது அடுத்தவரின் தன்மானத்தை குழித்தோண்டி புதைக்கும் ஆத்திரமோ எங்கள் அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் சங்க உறுப்பினர்களுக்கு அறவே கிடையாது. எல்லோரும் கண்ணியமாக நலமாக இருக்க வேண்டும் என்பதே அன்றி உள்நோக்கம் எதுவும் இல்லை.
அதேபோல் என்.ஜி.ஓக்கள் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதில்லை என்கிற பொத்தம் பொதுவான குற்றச்சாட்டுகளையும் அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் சங்கம் குறித்த விமர்சன பதிவில் அதிரை பிறை குறிப்பிட்டுள்ளது. சங்கம் துவங்கி 3 மாதங்கள் கூட முழுமையடையாத எங்களிடம் இதுவரை எத்தனை பேர் அடிப்படை தேவைகள் குறித்து புகார் அளித்து அதனை நாங்கள் புறந்தள்ளி அதிகாரிகள், அரசியல்வாதிகளை மேடை ஏற்றி புனிதர்கள் போல் காட்டினோம் என்கிற விவரங்களை ஆதாரப்பூர்வமாக அதிரை பிறை குறிப்பிட்டிருந்தால் உள்ளபடியே அவர்களது விமர்சனத்தை வரவேற்று இருப்போம்.
ஆனால் அவ்வாறு நடக்காத ஒன்றை கற்பனையாக அந்த இணையதளம் சித்தரித்து எங்கள் மீது புளுதியை வாரி வீச முயன்று கடைசியில் தோற்றுப்போய் இருக்கிறது. எங்கள் சங்கத்தை பொறுத்தவரை பல்துறை சார்ந்த சேவைகளை எளிய மக்களுக்கு வழங்குவதே முதன்மை பணி. அது தனியார் துறையாக இருந்தாலும் அரசு துறையாக இருந்தாலும் சேவை என்று வருகிறபோது எங்களால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்து கொடுப்போம்.
கடைசியாக இங்கு ஒன்றை தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஜால்ரா அடித்து அதன் மூலம் பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆயிரம் விமர்சனங்கள் எங்கள் மீது வைத்தாலும் கண்ணியமானவற்றை ஏற்போம். அவதூறுகளை புறந்தள்ளி சமூக சேவையை இன்னும் பலமடங்கு உறுதிக்கொண்டு செயல்படுத்துவோம்.
-செயலாளர்,
அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் சங்கம்.