அதிராம்பட்டினம் மக்களுக்கு சூரியனை தவிர்த்து பிற கட்சிகளுக்கு வாக்களிப்பது என்றால் ஒவ்வாமையோ என்னவோ… இதனாலேயே அதிரை மக்களின் தலைகளில் மிளகாய் அரைக்க சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறுவது இல்லை.
அதன்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும்,அதற்கு முன்னர் நடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் சூரியனுக்கே தமது வாக்குகளை குத்தி தள்ளினர் உள்ளூர் உபிக்கள், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதிராம்பட்டினம் பகுதியில் மட்டும் மொத்த வாக்கு சதவீதத்தில் 98 விழுக்காட்டை ச.முரசொலி பெற்றார்.
முன்னதாக வாக்கு சேகரிக்க வந்த அவரிடம், பொதுமக்கள் முக்கிய கோரிக்கைகள் குறித்த மனுக்களை வழங்கினர்,அதில் பிரதானமாக பாரம்பரியமிக்க அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் ரயில் நிறுத்தம் வேண்டும்,நடைமேடை விரிவாக்கம் வேண்டும், முன்பதிவு கவுண்டர் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு கண்டிப்பாக செய்து தருவேன் என வாக்குறுதிகளை அள்ளி வீசிய முரசொலி, வெற்றிபெற்ற பின்வு அதிராம்பட்டினம் பக்கமே தலைவைத்து படுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.
இதுதவிர அதிராம்பட்டினத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல், தவிர்த்தே வருகிறார் முரசொலி.
குறிப்பாக வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்த கூட இன்றுவரை வரவில்லை பரவாயில்ல பிசியாக இருப்பார் போல…
முக்கிய கோரிக்கைகளை மனுக்களாக அளித்தோமே அதற்காவது நடவடிக்கை உண்டா என பார்த்தால் ம்ம்ஹூம்…..
பட்டுக்கோட்டை ரயில் தேவைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சர்களிடத்தில் கோரிக்கை வைக்கிறார், தஞ்சை ரயில் நிலையை தேவைகளுக்கு அமைச்சரை சந்திக்கிறார் அதில் ஒரு பிட்டாவது அதிராம்பட்டினம் குறித்து வாய் திறக்க மறுப்பதின் மர்மம்தான் என்ன என வாக்களித்த மக்கள் கோடி கேள்விகளை முன் வைக்கின்றனர்.
திமுகவின் கோட்டைக்குள் ஓட்டை விழும் நிலையில், சட்டமன்ற உறுப்பினரும்,நாடாளுமன்ற உறுப்பினரும் அதிரையை புறக்கணித்து அரசியல் செய்ய நினைப்பது அடுத்த தேர்தலில் அறுவடையை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை என்கின்றனர் மூத்த உபிக்கள்.
கிழக்கு மேற்கு பிரச்சினைகள் பூதாகரமாகி வரும் நிலையில்,சமூதாய கட்சிகளின் பக்கம் இளைஞர்கள் திரும்பும் நிலையை திமுக செய்து வருவது, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனலாம் . சமீபத்தில் நடந்த தவெக மாநாட்டிற்கு கூட உள்ளூர் உபிக்கள் 7 வேன்களில் சென்று கலந்து கொண்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படியே சென்றால் எதிர்காலத்தில் திமுகவின் கல்வெட்டுக்கள் மட்டுமே எஞ்சும்.