வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 23 அன்று உருவாக உள்ளதால் அடுத்த வாரம் முதல் மீண்டும் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிரையில் நேற்று நள்ளிரவு முதல் துவங்கிய மழை இடைவிடாது தொடர்ந்து கொண்டிருந்தது. மழை காலங்களில் மாவட்ட நிர்வாகங்களின் உத்தரவுப்படி அந்தந்த பகுதிகளில் பெய்யும் மழைக்கு ஏற்ப பள்ளி தலைமை ஆசிரியர்களே பள்ளிக்கு விடுமுறை அளிப்பது சம்பந்தமாக முடிவு எடுக்கலாம் என உத்தரவு இருக்கும் நிலையில், அதிரையில் செயல்பட்டுவரும் பல்வேறு பள்ளிகள் விடுமுறை அளிக்கவில்லை. இதனால் மாணவர்களை உரிய நேரத்தில் பள்ளிக்கு அனுப்புவதிலும், ஆசிரியர்கள் தகுந்த நேரத்தில் பள்ளிக்கு செல்வதிலும் பெரும் அவதி ஏற்பட்டுள்ளது.
மழை காலங்களில் அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு மழை நிலவரம் அறிந்து விடுமுறையளிக்க மாவட்ட நிர்வாகங்களில் உத்தரவு இருக்கும் நிலையில் அதிரை பள்ளி தலைமையாசிரியர்கள் இதுகுறித்து முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவது பெரும் அவதியை ஏற்படுத்துவதாக பெற்றோர்கள் பலர் தெரிவித்தனர்.