தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது நாளை காலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது புயலாக மாறும் பட்சத்தில் இதற்கு “ஃபெங்கல்” என பெயரிடப்படும்.
இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வட இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் டெல்டா கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே கனமழை பதிவாகி வருகிறது.
இதற்கிடையே தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் இன்று காலை முதலே மிதமான மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. காலை ஆரம்பித்த மழை, மாலையை கடந்தும் தொடர்ந்து பெய்து வருகிறது. வரக்கூடிய மணி நேரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.