அதிராம்பட்டினம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு வார்டு மறுவரையரையில் சிறுபான்மை முஸ்லீம் பிரதிநிதிதுவத்தை குறைத்தது, கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட துணை தலைவர் பதவியை கூட்டணி தர்மத்தை மீறி கைப்பற்றியது, அர்டா மருத்துவமனை நிலத்தை குண்டர்களுடன் சென்று அபகரிக்க முயன்றது, சிறுபான்மை பள்ளிகூடத்தை உ.பி பாஜக அரசு பாணியில் புல்டோசர் கொண்டு நகராட்சி நிர்வாகம் இடிக்க துணிந்தது உள்ளிட்ட சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக இஸ்லாமியர்கள் பெரிதும் மதிக்க கூடிய மத குருவான இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் பெயர் எழுதப்பட்ட பலகையை புல்டோசர் கொண்டு உடைத்து குப்பை வண்டியில் நகராட்சி ஊழியர்கள் தூக்கிவீசிய சம்பவமும் அதை தொடர்ந்து அதிரையில் 11 நாட்கள் நடந்த தொடர் போராட்டமும் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அந்த வரிசையில் தற்போது மாட்டிறைச்சி விவகாரமும் சேர்ந்துள்ளது.
கடந்த டிசம்பர் 5ம் தேதி நகராட்சி தலைவர் MMS.தாஹிரா அம்மாள் தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் பங்கேற்ற கவுன்சிலர்கள் பலரும் தங்களது வார்டுக்கான தேவைகள் குறித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது பேசிய 9வது வார்டு கவுன்சிலர் ஹலீம், அதிரையில் சின்ன மார்க்கெட், பெரிய மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ரசாயனம் மூலம் மீன்கள் பதப்படுத்தப்படுகிறதா? மாட்டு இறைச்சிகள் முறையாக உரிமம் பெற்று விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.
உண்மையில் சமூக நல்லெண்ண அடிப்படையில் இந்த விவகாரத்தை அணுகி இருந்தால் இறைச்சி என்ற பொதுவான வார்த்தையை மட்டுமே பயன்படுத்தி பேசி இருக்க வேண்டும். அல்லது ஆடு, மாடு, கோழி இறைச்சி என்று சொல்லி இருக்கலாம். வேறொருவரின் தூண்டுதலில் அந்த நபர் எழுதி கொடுத்த வரிகளை அப்படியே நகர்மன்றத்தில் உள்ளபடியே ஒப்பித்து இருக்கிறார்கள் ஹலீம். சிறுபான்மை முஸ்லீம்கள் மற்றும் பிற அடித்தட்டு மக்களின் உணவாக இருக்கும் மாட்டிறைச்சிக்கு பாசிஸ்டுகள் எதிராக பேசுவதும் செயல்படுவதும் வாடிக்கை தான். ஆனால் திராவிட மாடல் ஆட்சி நடக்கும் பெரியார் மண்ணில் மாட்டிறைச்சி அரசியலை சிந்திக்கும் திறன் இல்லாத ஹலீம் போன்றோரை பயன்படுத்தி சிலர் கையில் எடுக்க முயல்வது எதிர்காலத்தில் அபாயகரமான அரசியலுக்கு வழிவக்கும் என்று விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே மாட்டிறைச்சி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கவுன்சிலர் ஹலீம் மீது முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறுபான்மை மற்றும் அடிதட்டு மக்களின் உணவு உரிமையை பாதுகாத்திட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
முன்னதாக இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் குறித்து அவ்வபோது இணையத்தில் வந்த செய்திகளை உளவுத்துறை முறையாக அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லாமல் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்பட்டது. மக்கள் போராட்டம் வெடித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை வெளியிட்ட பிறகே அது தமிழக அரசின் நேரடி கவனத்திற்கு சென்றது. அதேபோம் இந்த மாட்டிறைச்சி விவகாரத்தை ஆரம்பத்திலேயே கண்காணித்து முறையாக தலைமையின் கவனத்திற்கு உளவுத்துறை கொண்டு செல்லுமா? அல்லது நகராட்சி முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடந்த பிறகு தான் கவனத்தில் கொள்ளுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.