அதிரை எக்ஸ்பிரஸ்:- திண்டுக்கல்லில் 31.12.2017 நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், “10 ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும், 60 வயதை கடந்த கைதிகளையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வோம்” என அறிவித்திருப்பது சிறைவாசிகளின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சிறைவாசிகளின் குடும்பத்தார்களிடத்தில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இந்த அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றது.
மேலும் இந்த விடுதலை அறிவிப்பில் முஸ்லிம்களுக்கு எவ்வித பாரபட்சமும் காட்டக் கூடாது எனவும் அனைத்து சமூகங்களை சார்ந்த சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.
ஏனெனில் கடந்த காலங்களில் அண்ணா பிறந்தநாள் விழா, அண்ணா நூற்றாண்டு விழா ஆகிய நிகழ்வுகளின் போது விடுதலை செய்யப்பட்ட சிறைவாசிகளில் முஸ்லிம் சிறைவாசிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் தாங்கள் விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கையிலும் அவர்களின் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள் மற்றும் உறவுகள் என அனைவரும் வருடா வருடம் அரசு நமக்கு கருணை காட்டும் என்ற எதிர்பார்ப்புடனும் அதற்கான அறிவிப்பை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வேளையில் தமிழக முதல்வரின் இந்த விடுதலை அறிவிப்பு அவர்களின் குடும்பங்களில் மிகுந்த உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது வெறும் அறிவிப்பாக நின்று விடாமல் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இதனை நீதியுடன் செயல்படுத்தும் போது தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிக்கு
எம்.முஹம்மது இஸ்மாயில்,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.