அதிராம்பட்டினம்,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அதிரை பேரூர் செயலர் வழக்குரைஞர் ஏ.அப்துல் முனாப், பொருளாளர் ஏ. சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் கலந்துகொண்டு பேசியது;
இந்தியத் திருநாட்டில் அனைத்து மக்களும் எல்லாம் பெற்று வாழ்வதற்கு சம உரிமையை அரசியல் சாசனம் வழிவகுத்து தந்துள்ளது. இவற்றை, சீர்குலைக்கும் வகையில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு முத்தலாக் மசோதாவை கொண்டு வந்துள்ளது. முஸ்லிம் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்பையும் மீறி முத்தலாக் சட்ட முன்வடிவை மக்களவையில் கடந்த டிச.28 ந் தேதி சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இவை, இஸ்லாமிய ஷரியத் சட்டத்திற்கு எதிரானது. இவற்றை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வன்மையாக எதிர்க்கிறது. முத்தலாக் மசோதாவை எதிர்த்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உட்பட பட்டுக்கோட்டை வட்டாரப் அனைத்துப் பள்ளிவாசல் ஜமாத்தார்கள், அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே, எதிர்வரும் ஜன.5 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், அனைவரும் தவறாது கலந்துகொண்டு அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்’ என்றார்.
முன்னதாக, கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ. சாகுல் ஹமீது வரவேற்றுப் பேசினார். முடிவில் மாவட்ட பிரதிநிதி ஜமால் முகமது நன்றி கூறினார். இக்கூட்டத்தில், அதிரை பேரூர் துணைச் செயலர் அபு பக்கர், என்.எம் முகமது ஹனீபா, அப்துல் ஜப்பார், சாகுல் ஹமீது மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.