சென்னை: டி.டி.வி.தினகரன் சட்டப்பேரவையில் அரசை விமர்சித்தால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறுக்கிட வேண்டாம் என சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு கொறடா உத்தரவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடைபிடிக்க வேண்டும் என முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். மக்கள் பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் மட்டுமே பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளை சமாளிப்பது, ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டன.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 104 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர். இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்பட 7 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
தமிழக சட்டப்பேரவை கூட்டம், வரும், 8-ம் தேதி தொடங்குகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவையில் உரையாற்றுகிறார். கூட்டத்தில், சுயேச்சையாக வெற்றி பெற்ற தினகரனும், பங்கேற்க உள்ளார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை தங்கள் வசம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க, தினகரனும் முயற்சித்து வருகிறார். இவற்றை முறியடிக்கவும் சட்டப்பேரவை கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை தீர்மானிக்கவும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.