புனித ரமலான் மாதம் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இம்மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பது வழக்கம். ரமலானின்போது சஹர் உணவு(அதிகாலை நேரத்தில்) சாப்பிட்டுவிட்டு மாலை வரை முஸ்லிம்கள் நோன்பு நோற்பார்கள்.
அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் பள்ளிகள் மற்றும் இளைஞர் அணியினரின் சார்பில் சஹர் உணவு கலாச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்த சஹர் விருந்தில் முத்துப்பேட்டை மட்டுமின்றி சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்த முஸ்லிம்களும் பங்கேற்று வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டே முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் சார்பில் சஹர் உணவு கலாச்சாரத்தை நிறுத்தக்கோரி, அதன் ஏற்பாட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அந்த வகையில் இந்த ஆண்டும் முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் சார்பில், ரமலானின் கடைசி 10 நாட்களில் முத்துப்பேட்டையில் நடத்தப்படும் சஹர் உணவு கலாச்சாரத்தை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த இரண்டு ஆண்டுகளாக நமதூரில் ரமலான் மாதம் கடைசி பத்து நாட்கள் கொடுக்கப்படும் சஹர் உணவுக்காக பல லட்சங்கள் வீண் விரையம் ஆக்கப்படுவதால் அதனை நிறுத்தும்படி வேண்டுகோள் கடிதம் அனுப்பி இருந்தோம். ஒரு சில பள்ளிகளில் சில மாறுதல்களை செய்தனர்.
ஆனால் நமது ஊரை சுற்றியுள்ள நமது சமுதாய மக்கள் அதிகம் வாழும் பண வசதி படைத்தவர்கள் வாழும் ஊர்களில் கூட இது போன்ற வீண் விரையமான நிகழ்வுகள் நடைமுறையில் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
எனவே இந்த ஆண்டு ரமலான் மாதத்தில் தங்கள் பள்ளிகளில் விருந்துக்கு ஏற்பாடு செய்யும் தனிநபர் மற்றும் இளைஞர் அணியினரிடம் அறிவுறுத்தி இதனை நிறுத்திவிட்டு தங்கள் முஹல்லாவில் வசிக்கும் ஏழை குடும்பத்தினரை கண்டறிந்து ரமலான் மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்களை வாங்கி கொடுத்து ரமலான் நோன்பினை நிம்மதியாக நோற்கச் செய்து அவர்களின் துஆவினை பெற்றுக்கொள்ளச் செய்யுமாறு முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாத் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
