சென்னை மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கான அபராதத்தொகை 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளை சாலையில் மேய விடும் உரிமையாளர்களிடம் இந்த அபராதத்தொகை வசூலிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் நடைபெற்ற சிறப்பு மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த புதிய அபராதத்தொகை அமலுக்கு வந்திருக்கிறது.
இதன்படி, சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பிடித்து அவற்றின் காதில் வரிசை எண் கொண்ட புதிய டோக்கன் இணைக்கப்படும் என்றும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், பராமரிப்புத் தொகையாக 750 ரூபாயும் செலுத்தி உரிமையாளர் அவற்றை அழைத்துச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2-வது முறையாக மீண்டும் அதே கால்நடைகள் சாலையில் பிடிபட்டால், அவை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும், அதற்கு பதிலாக அவை புளூகிராஸ் போன்ற அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்பு, சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்கும் மாநகராட்சி ஊழியர்கள், அதன் உரிமையாளர்களிடம் 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டு, கால்நடைகளை திரும்ப ஒப்படைத்தனர். தற்போது அபராதத்தொகை பல மடங்கு உயர்ந்திருப்பதோடு, பறிமுதல் நடவடிக்கையையும் மேற்கொள்ள மாநகராட்சியின் புதிய தீர்மானம் வழிவகை செய்கிறது.