தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்று சுழற்சியே இந்த கோடை மழைக்கான காரணியாக கூறப்படுகிறது. இந்த காற்று சுழற்சி, தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதியில் நிலவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று கோடை மழை கொட்டி தீர்த்தது.
அதிராம்பட்டினத்தில் இன்று சனிக்கிழமை காலை முதலே வெளியின் தாக்கம் இன்றி, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், இரவு 8 மணியளவில் மழை பொழிய துவங்கியது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் தொடங்கிய மழை, ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழையாக கொட்டித் தீர்த்து வருகிறது.
இதன் காரணமாக வெப்பம் தணிந்து நகர் முழுவதும் குளுமையான சூழல் நிலவுவதால், கடும் வெப்பத்தால் தவித்துவந்த பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.