அதிரை எக்ஸ்பிரஸ்:-
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் உடனடியாக பணிக்கு திரும்பா விட்டால் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் எனவும், நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் ஹைகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊதியம் திருப்தி இல்லை என்றால், வேறு பணிக்கு செல்லலாம். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு உடனே திரும்புங்கள் என்றும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் தொடர்பாக நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜேந்திரன் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் முறையீடு செய்தார். 24 மணிநேரத்திற்குள் அரசு தலையிட்டு சுமுகத் தீர்வு காண உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இதுதொடர்பாக தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்காக விசாரணைக்கு எடுக்க மறுத்த நீதிபதிகள், மனுதாரர் மனுவாக தாக்கல் செய்தால் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பபடும் என தெரிவித்தனர். அதன் படி முறையீடு செய்யப்பட்டு அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். ஒழுங்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கையை அரசு எடுக்கலாம் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர், நடத்துனர்கள் உடனடியாக பணிக்கு வராவிட்டால் பணிநீக்கம் உள்ளிட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்களின் நலன் கருதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இருப்பவர்கள் திடீர் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், செலியிர்கள் வேலைநிறுத்தத்தின் போது நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவுகளையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதிப்பதாக கூறிய நீதிபதிகள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஆணை பிறப்பித்தனர். பணிக்கு திரும்பாவிட்டால் டிஸ்மிஸ் செய்யப்படுவதோடு நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஊதியம் திருப்தி இல்லை என்றால் வேறு பணிக்கு செல்லலாம் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார். மேலும் வேலைநிறுத்தம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் பதில் அளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்