புதுடெல்லி,
மார்ச் 1–ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இந்திய குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொருவரின் ஆதார் அட்டையிலும் அவரது புகைப்படம், பெயர் விவரம், முகவரி, கண் கருவிழி படலம், கை பெருவிரல் ரேகை போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் அதில் 12 இலக்கங்கள் கொண்ட எண்ணும் இடம்பெற்று இருக்கிறது.
வங்கி கணக்கு தொடங்குவது, செல்போன் இணைப்புக்கான சிம் கார்டு வாங்குவது, சமையல் கியாஸ் இணைப்பு, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது போன்றவற்றுக்கு ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
இதனால் இதுபோன்றவற்றுக்கு ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை தெரிவிப்பது மிகவும் கட்டாயம் ஆகிறது.
இப்படி பல இடங்களிலும் ஆதார் அட்டையை பயன்படுத்தும் போது, அந்த அட்டைதாரரை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண் மூலம் வங்கி கணக்குகளில் மோசடி நடைபெற வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் திருடப்படுவதை தடுத்து, தனிநபர் ரகசியத்தை பாதுகாக்கும் வகையில், ஆதார் அட்டைக்கு மாற்றாக அதேபோன்ற புதிய அடையாள அட்டை முறையை (மெய்நிகர் ஆதார் அட்டை) இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (உதய்) நேற்று முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் இணையதள முகவரிக்கு சென்று இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை உருவாக்கி பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம், பெயர் விவரம் போன்ற அனைத்து விவரங்களும் இப்புதிய அட்டையில் இடம் பெற்று இருக்கும்.
ஆனால் ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண்ணுக்கு பதிலாக இந்த புதிய அடையாள அட்டையில் 16 இலக்க எண் இருக்கும். சம்பந்தப்பட்ட நபரே இந்த எண்ணை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது விரும்பும் குறிப்பிட்ட காலவரை வரை இந்த புதிய அட்டையை பயன்படுத்தலாம். தேவைப்படும் போதெல்லாம் இந்த அடையாள அட்டையில் உள்ள 16 இலக்க எண்ணை மாற்றி புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அப்படி புதிய அட்டை பெறும் பட்சத்தில், ஏற்கனவே பெற்று இருந்த மெய்நிகர் ஆதார் அட்டை தானாக ரத்தாகிவிடும்.
இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபரின் உண்மையான ஆதார் எண் மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளப்படுவது தவிர்க்கப்படும். முக்கியமாக தனிநபர் ரகசியம் காக்கப்படுவதோடு, தகவல் திருட்டும் தடுத்து நிறுத்தப்படுகிறது.
ஆதார் அட்டை எந்தெந்த இடங்களில் எல்லாம் தேவைப்படுமோ, அந்த இடங்களில் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை பயன்படுத்தலாம். சம்பந்தப்பட்ட நபரை தவிர வேறு யாரும் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை மோசடியாக தயாரிக்க முடியாது.
வருகிற மார்ச் 1–ந் தேதி முதல் இந்த மெய்நிகர் ஆதார் அடையாள அட்டையை நடைமுறைக்கு கொண்டு வர இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தீர்மானித்து உள்ளது. மேலும் ஆதார் அட்டை எங்கெங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அந்த இடங்களில் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை ஜூன் 1–ந் தேதி முதல் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளும் நடைமுறையை செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
மேற்கண்ட தகவல்களை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தெரிவித்து உள்ளது.